திருவள்ளூர் ரயில் தீ விபத்தால் பயணிகள் அவதி; 265 சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருவள்ளூர் ரயில் தீ விபத்தால் பயணிகள் அவதி; 265 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஜூலை 13, 2025 05:48 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் தீ விபத்தால் பயணிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளதால், பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து 265 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் சென்னை துறைமுகத்தில் இருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தீ பிடித்தது. கடும் போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் டீசல் கசிவு காரணமாக மீண்டும் தீப்பிடிக்க, அதை அணைக்க தீயணைப்புத் துறையினர் முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.
தீ விபத்து எதிரொலியாக, சென்னை அரக்கோணம் வழித்தடத்தில் பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், அதில் உள்ள பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பயணிகளின் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளதால் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பாக காட்பாடி, குடியாத்தம், அரக்கோணம், திருவள்ளூர், மற்றும் திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மாலை 04:00 மணி நிலவரப்படி 265 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக, பயணிகள் வசதிக்காக திருவள்ளூர் பஸ் நிலையம் - ஆவடி மற்றும் திருவள்ளூர் பஸ் நிலையம் - பூந்தமல்லி இடையே பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக தற்போது வரை தடத்தில் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 60 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.