திருவள்ளூருக்கு பதில் திருவண்ணாமலை: மனுவை சுற்றலில் விடும் 'சி.எம்., செல்'
திருவள்ளூருக்கு பதில் திருவண்ணாமலை: மனுவை சுற்றலில் விடும் 'சி.எம்., செல்'
ADDED : மே 28, 2024 05:35 AM

சென்னை : மாவட்ட நிர்வாகத்திடம் தரப்படும் மனுக்கள் தான் கிடப்புக்கு போகின்றன என்றால், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் கொடுக்கப்படும் மனுக்களும், சுற்றலில் விடப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
தாலுகா அளவில், மாவட்ட அளவில் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படா விட்டால், சென்னை கோட்டையில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் பலர் மனு கொடுக்கின்றனர். அங்காவது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வெளியூர்களில் இருந்து வந்து காத்திருந்து மனு அளிக்கின்றனர்.
தனிப்பிரிவு அலுவலக ஊழியர்கள் மனுவை வாங்கி, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புகின்றனர். அவர்கள் மாவட்டத்திற்கு அனுப்புகின்றனர். எந்த நடவடிக்கையும் எடுக்காத அலுவலரிடமே, அந்த மனு மீண்டும் செல்கிறது.
அவர் நடவடிக்கை எடுத்து விட்டதாக, தனிப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கிறார். தீர்வு காணப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்படுகிறது.
பல முறை மனு கொடுத்தவர்கள் ஏராளம். மனு கொடுப்பவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்றால், அதை அவரிடமே கூறலாம்; அதையும் செய்வதில்லை.
இந்நிலையில், வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த மனுவை, திருவள்ளுவர் மாவட்டத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அனுப்பி உள்ளனர்.
இதுபோன்ற நிலை இருந்தால், மனுவிற்கு எப்படி தீர்வு கிடைக்கும் என, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் உதய்பாஸ்கர் கூறியதாவது: முதல்வரின் தனிப்பிரிவு தற்போது காட்சி துறையாக உள்ளது. எனக்கு சொந்தமான நிலம், திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை கைப்பற்ற சிலர் முயற்சித்து வருகின்றனர்.
நிலத்தை காப்பாற்ற, பட்டா பெயர் மாற்றம் கோரி, முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு அளித்தேன். அந்த மனுவை, திருவள்ளூர் கலெக்டருக்கு அனுப்பாமல், திருவண்ணாமலை கலெக்டருக்கு அனுப்பி உள்ளனர்.
அதேபோல, தனியார் நிறுவனம் தொடர்பாக, கலெக்டர் நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த மனுவை, தொழிலாளர் நலத்துறைக்கு அனுப்பி உள்ளனர்.
மனுவுக்கு நிவாரணம் அளிக்காமல் சுற்றலில் விடுகின்றனர். தனிப்பிரிவு சுதந்திரமாக செயல்பட, தலைமை செயலகத்தை விட்டு, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.