ADDED : மார் 03, 2024 04:32 AM
சென்னை : தஞ்சாவூர் மாவட்டத்தில், புதிதாக திருவோணம் தாலுகா உருவாக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், ஜாதி சான்று, வருமான சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட வருவாய் துறை சேவைகளை பெற, 34 கி.மீ., தொலைவில் உள்ள ஒரத்தநாடு தாலுகா அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. எனவே, அப்பகுதி மக்கள், திருவோணத்தை தலைமையிடமாக்கி, புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதை ஏற்று, தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வருவாய் தாலுகாக்களை சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்துார், திருநெல்லுார், வெங்கரை ஆகிய நான்கு குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி, திருவோணத்தை தலைமையிடமாக்கி, புதிய திருவோணம் தாலுகாவை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதற்கான அரசாணையை, வருவாய் துறை வெளியிட்டுள்ளது.

