இப்படி தான் நடத்தணும் மேலாண்மை குழு கூட்டம் வழிகாட்டுதல் வெளியிட்டது பள்ளிக்கல்வி துறை வழிகாட்டுதல் வெளியிட்டது பள்ளிக்கல்வி துறை
இப்படி தான் நடத்தணும் மேலாண்மை குழு கூட்டம் வழிகாட்டுதல் வெளியிட்டது பள்ளிக்கல்வி துறை வழிகாட்டுதல் வெளியிட்டது பள்ளிக்கல்வி துறை
ADDED : அக் 28, 2025 09:57 PM
பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டத்தை நடத்தும் விதம் குறித்த வழிகாட்டுதலை, பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரின் மேம்பாடு, கல்வித்தரம், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்றவற்றுக்காக, பள்ளிகள் தோறும் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.
சில பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் சிறப்பாக செயல்பட்டாலும், பல பள்ளிகளில், பெயரளவில் மட்டுமே உள்ளன. வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, டீ, வடையுடன் கூட்டத்தை முடித்துக் கொள்ளும் மேலாண்மை குழுக்களும் இருக்கவே செய்கின்ற ன.
சில பள்ளிகளில் நடத்தப்படும் பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில், சொற்ப அளவு உறுப்பினர்களே பங்கேற்கும் நிலையும் உள்ளது.
இதற்கிடையில், 'ஒவ்வொரு பள்ளியிலும் அடுத்த மாதம், 7ம் தேதி மாலை, 3:00 முதல், 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது; அதன் விபரம்:
கூட்டம் துவங்கும் முன், மாலை, 3:00 மணி முதல், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும், தலைமையாசிரியருடன் இணைந்து, பள்ளி வளாகத்தை பார்வையிட வேண்டும்
மாணவ - மாணவியருக்கான கழிப்பறை வசதி, குடிநீர், சமையலறை, சமையல் பொருட்கள், கிடங்கு வசதி, நுாலகம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்றவற்றை பார்வையிட்டு, தேவைகளை பட்டியலிட வேண்டும்
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, தேவைகளை கண்டறிந்து, அவற்றை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்
மேலாண்மைக்குழு செயல்பாடுகள் குறித்த பள்ளிக்கல்வி துறையின் அதிகாரப்பூர்வ காணொலியை கூட்ட அரங்கில் திரையிட வேண்டும்
மேலாண்மை குழு உறுப்பினர்களின் வருகையை, அதற்கான பிரத்யேக செயலியில் மேலாண்மை குழு தலைவரும், தலைமையாசிரியரும் இணைந்து பதிவு செய்ய வேண்டும்.
இந்த நடைமுறைகளுக்கு பிறகே, கூட்டத்தை துவக்க வேண்டும்
இவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- நமது நிருபர் -

