'இது மேனாமினுக்கி கட்சி அல்ல' இளைஞர்களுக்கு துரைமுருகன் பாடம்
'இது மேனாமினுக்கி கட்சி அல்ல' இளைஞர்களுக்கு துரைமுருகன் பாடம்
ADDED : செப் 18, 2024 10:19 PM
சென்னை:''கொள்கை உறுதியோடு தி.மு.க.,வுக்கு வாருங்கள்,'' என, இளைஞர்களுக்கு தி.மு.க., பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
தி.மு.க., வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், துரைமுருகன் கூறியுள்ளதாவது:
இன்று நிறைய இளைஞர்கள், படித்தவர்கள், தி.மு.க., பக்கம் திரும்பி உள்ளனர். அவர்களை எல்லாம் மனமார வரவேற்கிறேன். இளையவர்கள் வந்தால்தான், இக்கட்சியை அடுத்து நடத்த வாய்ப்பு ஏற்படும். கட்சியில் நிலைத்திருக்க வேண்டுமானால், மன உறுதி வேண்டும்.
நாம் ஏற்றுக் கொள்கிற கொள்கை உண்மையானதாக இருக்கும்போது, இந்த கொள்கைக்காக உழைக்கலாம்; தியாகம் செய்யலாம் என்ற எண்ணம் உங்களுக்கு வரும். எனவே, கொள்கை அடிப்படையில், கட்சிக்கு வர வேண்டும்.
தி.மு.க., கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, மன திடத்தோடு, கொள்கையோடு வாருங்கள். கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். தியாகம் புரிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
'கட்சியால் தனக்கு என்ன லாபம் எனக் கருதுபவர் ஒரு வகை. தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்பது இன்னொரு வகை. தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என பார்ப்பவர், கட்சியின் ரத்த நாளத்தை போன்றவர். கட்சியால் தனக்கு லாபம் எனக் கருதுபவர், கட்சியில் வளரும் புற்றுநோய்க்கு சமமானவர்' என, கருணாநிதி கூறுவார்.
எனவே, கட்சிக்கு வரும் நண்பர்களை மனமார வரவேற்கிறேன். எங்களுக்கு பின், இந்த கட்சியை நீங்கள்தான் கட்டிக்காக்க வேண்டும். எனவே, கொள்கை உறுதியோடு வாருங்கள். மன திடத்தோடு வாருங்கள். தியாகம், எந்த நிலைக்கும் தயார் என நினைத்து வாருங்கள். வரலாறுகளை படித்துவிட்டு வாருங்கள்.
இது மேனாமினுக்கி கட்சி அல்ல. அடித்தளத்தில் உள்ள, ஏழை மக்கள், பாட்டாளி தோழர்கள், நெசவாளர்கள் போன்றோருக்காக உழைக்கிற கட்சி. அதையும் மனதில் நிறுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

