ADDED : பிப் 15, 2024 04:28 AM

சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சமீபத்தில், தமிழக கவர்னர் ரவி, சுதந்திரப் போரில் நேதாஜியின் பங்கு பற்றி குறிப்பிட்ட விஷயம் பேசு பொருளாகி விட்டது. அவர் குறிப்பிட வந்த விஷயத்தின் சுருக்கம்... 'காந்திஜி போலவே சுதந்திரப் போரில் நேதாஜிக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு' என்பது தான்.
அன்றைய ஐ.சி.எஸ்., படிப்பில் முதல் மாணவராக தேர்வாகியும், சுகபோக வாழ்க்கையை துறந்து, நாட்டின் சுதந்திரத்திற்காக போராட்ட வாழ்க்கையை மேற்கொண்டவர் நேதாஜி.
'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம் ஹிட்லர், முசோலினி மற்றும் ஜப்பானின் டோஜோவோடு இணைந்து, இந்திய தேசிய ராணுவமான, ஐ.என்.ஏ.,வை கட்டமைத்து, பிரிட்டிஷாரை ராணுவ ரீதியாக எதிர் கொண்டவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
காந்திஜி, பிர்லா மாளிகையில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த போது, பர்மா காடுகளில் மழைக்குள்ளும், பனிக்குள்ளும் கஷ்டப்பட்டு, ஒரு நாளைக்கு ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு, சுதேசி ராணுவத்தினரின் தோளோடு தோள் நின்று, தாய் நாட்டிற்காக, நேச நாடுகளின் படையை எதிர்த்து போராடி கொண்டிருந்தார் நேதாஜி.
அந்தமான் தீவை பிரிட்டிஷ் துருப்புகளிடமிருந்து மீட்டு, வெளி உலகிற்கு சுதந்திர இந்தியாவை நிறுவி காண்பித்தார். அந்த சுதந்திர இந்தியாவை, 10க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரிக்க காரணமாக இருந்தவர்.
காந்திஜியின் வரவுக்கு பின்தான், இந்திய சுதந்திர போராட்டம், மக்கள் இயக்கமாக மலர்ந்தது என்பதில், நேதாஜி உட்பட யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.
ஆனால், 'பிரிட்டிஷாரை கவலை கொள்ள செய்தது, காந்திஜியின் ராட்டை அல்ல, நேதாஜியின் ராணுவம் தான்' என்பதை அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அட்லியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எங்களது ஆதங்கம், சுக வாழ்வை துறந்து, சுதந்திரத்திற்காக, சுயநலமில்லாமல் பாடுபட்ட ஒரு மாபெரும் தலைவனின் உழைப்பு சரியான முறையில், சொந்த நாட்டிலேயே கவுரவிக்கப்படவில்லையே என்பது தான்.
எங்களது ஏக்கத்தையும், ஆதங்கத்தையும் சரியான முறையில் பிரதிபலித்த தமிழக கவர்னருக்கு ஒரு ராயல் சல்யூட்!

