ADDED : மார் 23, 2024 02:35 AM

எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திரைப்படங்களில் விஜய் என்று உங்களை முன்னிலைப்படுத்திய நீங்கள், அரசியலில் நுழையும் போது, ஜோசப் விஜய் என்று அழுத்திக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டீர்கள்.
திரைப்படங்களில் சொல்லாத உங்கள் முழு பெயரை, அரசியலில் நுழையும் போது அழுத்தம் திருத்தமாக சொன்னபோதே, நீங்கள் எந்த வித அரசியலை முன்னிலைப்படுத்த போகிறீர்கள் என்பதைக் கூறி விட்டீர்கள்.
இப்போது இந்திய குடியுரிமை திருத்த சட்டம் பிளவுவாத அரசியலை முன்னிறுத்துவதாக கூறியுள்ளீர்கள்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டம் யாரை, எவ்வாறு பிளவுபடுத்துகிறது என்பதை நீங்கள் விளக்கினால் நல்லது.
எங்களுக்குத் தெரிந்த வரை, இந்திய குடியுரிமை திருத்த சட்டம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கன் போன்ற நாடுகளிலிருந்து, டிசம்பர் 2014க்கு முன் அகதிகளாக வந்த, சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் ஒரு சட்டம். இவர்களில் ஹிந்துக்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், சமணர்கள், சீக்கியர்கள் அடக்கம்.
இதில், இங்கு குடிமக்களாக வசிக்கும் நம் நாட்டு மக்களுக்கு, என்ன பிரச்னை வந்து விடப் போகிறது? இதனால் மக்கள் எவ்வாறு பிளவுபடுவர்?
அடிப்படையைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?
நீங்கள் இப்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். இந்த திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, தாராள மனதுடன் கொள்கை முடிவுகளை எடுத்தால் பெரிய அளவில் சாதிக்கலாம்.
உங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள, அதே திராவிடக் குட்டையில் நீங்களும் ஊறினால், கமலுக்கு நேர்ந்த கதி தான் உங்களுக்கும் ஏற்படும்.

