ADDED : மார் 05, 2024 03:33 AM

ஆர்.துரை, மேற்கு ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
லோக்சபா தேர்தலில், பா.ஜ.,தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்., தலைமையில், 'இண்டியா' கூட்டணியும் மோதுகின்றன. பா.ஜ.,வை பொறுத்தமட்டில், இந்த தேர்தலில் வெற்றி பெற்று பாரதத்தை, உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளது.
எதிர் அணியை பொறுத்தமட்டில், நாடு எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை, பா.ஜ., கட்சி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என மட்டுமே நினைக்கிறது.
முதலில் இரு அணிகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் கட்சிகளின் முந்தைய சரித்திரத்தை பார்ப்போம். முன்பு ஜனசங்கமாக இருந்து பின், சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியாக மாறியது.
இதற்கு முன் ஆறு ஆண்டுகள் வாஜ்பாயும், தற்போது 10 ஆண்டுகளாக மோடியும் சிறப்பான ஆட்சியை அளித்துள்ளனர். இதன் தலைவர்கள் ஷியாமபிரசாத் முகர்ஜி, தீன்தயாள்உபாத்தியாயா, வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி அனைவரும் தேசத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் இடம் தராமல், மோடி நல்லாட்சி நடத்தி வருகிறார். ஆனால், அதற்கு முன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., தலைமையிலான கூட்டணி அரசில் எத்தனை ஊழல்கள் வெடித்து கிளம்பின என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம்.
கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்., கூட்டணி ஆட்சியை இருண்ட காலம் என்றே சொல்லலாம். காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல், நிலக்கரி ஊழல் என, பத்தாண்டுகளில் ஊழல் முறைகேடுகள் வெளிவராத நாட்களே இல்லை எனலாம்.
ஆனால், பா.ஜ., ஆட்சியாளர்கள் நீதி, நேர்மை, ஆன்மிக எண்ணம் உடையவர்கள். காஷ்மீருக்கான 370 சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை முன்னிறுத்தினர். அடுத்து அயோத்தி ராம ஜென்ம பூமியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ராமர் கோவில் கட்டி முடித்துள்ளனர்.
எனவே, லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்பதில், நாடு முழுக்க உள்ள வாக்காளர்கள் தெளிவாகவே உள்ளனர். இது, தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

