ADDED : அக் 29, 2024 07:41 PM
தேனி:''தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் இருப்பவர்கள் அவரை ரசிப்பார்கள். ஆனால் எனக்குத்தான் ஓட்டளிப்பர்,'' என, தேனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தேனியில் நடந்த கட்சியினர் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
நான்கு தேர்தல்களில் தனித்து நின்று தோல்வி அடைந்தாலும் சமரசம் இன்றி, அடுத்த தேர்தல்களிலும் தனித்து நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இந்தியாவை கூட்டாச்சி முறையில் ஆள்வது தான் சமத்துவ சமூகத்திற்கான ஒரே தீர்வு. கல்வியில் மாநில உரிமையை பறித்தது, நீட் தேர்வு கொண்டு வந்தது, ஜி.எஸ்.டி., அறிமுகம், என்.ஐ.ஏ., என அனைத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ். அவைகளுக்கு பூஸ்ட், போன்விட்டா கொடுத்து வளர்த்து வருவது பா.ஜ.,
விஜய், கட்சியுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பிற கட்சிகளை வரவேற்றதை நானும் வரவேற்கிறேன். தமிழகத்தின் முதல்வர், துணை முதல்வர் என மிக உயர்ந்த பதவி ஒரே வீட்டில் இருப்பது சமூக நீதியாகுமா. நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் என்ற உயர் பதவிகள் ஒரே மாநிலத்திற்கு (குஜராத்) வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தோற்கடிக்கப்பட்ட எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக ஆக்கப்பட்டுள்ளார். மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படை மாண்பு சிதைக்கப்படுகிறது. காங்., மூத்த தலைவர் ராகுல் 2 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுகிறார். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்கிறேன். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவை வாபஸ் பெற்றால் மத்திய பா.ஜ., ஆட்சி கலைந்து விடும். ஆட்சி கவிழ்ந்தால், தி.மு.க., ஆதரவு கொடுத்து முட்டு கொடுக்கும்.ஓட்டுக்கு ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் தனித்து போட்டியிட்டு, 36 லட்சம் ஓட்டுகளை பெற்றேன். இந்திய அரசியல் வரலாற்றில் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நாங்கள் தான். கூட்டத்தை வைத்து முடிவு செய்ய கூடாது. ஒரு நடிகர் வந்து ஒரு இடத்திற்கு வரும்போது, மக்கள் அதிகமாக கூடுவார்கள். இது இயல்பு தான்.
த.வெ.க., தலைவர் விஜய், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கட்சி துவங்கிய போது ரசிகர் மன்றங்கள் மாற்றப்பட்டு கட்சியாக கட்டமைக்கப்பட்டன. ஆனால், நாம் தமிழர் கட்சி தொண்டர்களின் கட்டமைப்பு அவ்வாறு அல்ல. ஆகையால் விஜய் ரசிகர்கள் அவரை ரசிப்பர். ஆனால் எனக்குத்தான் ஓட்டளிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.