நகர்ப்புற வாரியத்தில் மனை வாங்கியோருக்கு விரைவில் பத்திரம்
நகர்ப்புற வாரியத்தில் மனை வாங்கியோருக்கு விரைவில் பத்திரம்
ADDED : டிச 12, 2025 05:08 AM

சென்னை: நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் நிலுவை கோப்புகளை முடித்து, உடனடியாக விற்பனை பத்திரங்கள் வழங்க, அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டம், தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில், குத்தகை மற்றும் விற்பனை என்ற அடிப்படையில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இவ்வாறு மனை ஒதுக்கீடு பெற்றவர்களில், தவணை செலுத்தி முடித்தவர்களுக்கு விற்பனை பத்திரம் கிடைக்கவில்லை என, புகார் கூறப்படுகிறது. இதில், 93,000 மனைகள் ஒதுக்கப்பட்டதில், 37,000 பேருக்கு மட்டுமே விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எஞ்சிய, 56,000 பேருக்கு விற்பனை பத்திரங்கள் தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கான அதிகாரத்தை மாற்றியதால், ஒதுக்கீட்டாளர்கள் வாரிய தலைமை அலுவலகத்துக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நமது நாளிதழில், டிச., 8ல் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, விற்பனை பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் விளக்கம் கேட்டுஉள்ளனர்.
இந்நிலையில், நகர்ப்புற வாரிய உயரதிகாரிகள் ஆய்வு செய்ததில், இந்த மாதத்தில் இதுவரை ஆறு பேருக்கு மட்டுமே விற்பனை பத்திரம் வழங்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, நிலுவை யில் உள்ள கோப்புகள் மீதான ஆய்வை விரைந்து முடித்து, உடனடியாக விற்பனை பத்திரம் வழங்க, அந்த வாரிய உய ரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

