'மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்': எஸ்.பி., காட்டம் ஓபன் மைக்கில் எஸ்.பி., காட்டம்
'மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்': எஸ்.பி., காட்டம் ஓபன் மைக்கில் எஸ்.பி., காட்டம்
ADDED : செப் 05, 2025 01:22 AM
சிதம்பரம்:லாட்டரி விற்பனை விவகாரத்தில் காவல் துறை அதிகாரிகளை, ஓபன் மைக்கில், 'மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்' என, எஸ்.பி., வெளுத்து வாங்கினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த லாட்டரி வியாபாரி நசீர், 56, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். இதற்கு போலீசார் உடந்தையாக இருந்ததாக வடக்கு மண்டல ஐ.ஜி., அஷ்ராகார்க் வரை புகார் சென்றது.
தொடர்ந்து, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்படி, தனிப்படை போலீசார் நசீரை பிடித்தனர். இதில், போலீஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை பல லட்சம் ரூபாய் மாமூல் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக், இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு உட்பட 7 பேர் வேலுார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி உள்ளிட்ட ஏழு உட்கோட்ட காவல் அதிகாரிகளையும் ஓபன் மைக்கில் அழைத்தார் எஸ்.பி., ஜெயக்குமார்.
'காலம் காலமாக லாட்டரி விற்பனையில் போலீசார் மாமூல் வசூலித்து வந்தது தெரிகிறது. லாட்டரி, கஞ்சா விற்பனைக்காக மாமூல் வாங்குபவர்கள், பிச்சை எடுத்து சாப்பிடலாம்' என, அவர் கடுமையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.