ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர்கள் மக்களின் வாழ்த்துக்களை பெற முடியாது
ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர்கள் மக்களின் வாழ்த்துக்களை பெற முடியாது
ADDED : ஜூன் 23, 2025 06:04 AM

சென்னை : “ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்லா தவர்கள் மக்களின் வாழ்த்துக்களை பெற முடியாது,” என, முன்னாள் கவர்னர் தமிழிசை தெரிவித்து உள்ளார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் நெடுங்காலமாக, ஹிந்துக்கள் என்றால் கேலி, கிண்டல் செய்யலாம், அவர்களின் கொள்கைகளை, கலாசாரத்தை கீழ்த்தரமாக பேசலாம் என்ற சிந்தனை பரவி வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதேபோல், தமிழையும், முருகனையும்; தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிப்பதற்கான ஏற்பாடு, இங்கு நெடுங்காலமாக உள்ளது.
தமிழ் ஆன்மிகத்தை வளர்த்தது; ஆன்மிகம் தமிழை வளர்த்தது. பாம்பன் சுவாமிகள் மட்டும், 6,666 தமிழ் பாடல்களை, முருகன் மீது பாடியுள்ளார். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக, தமிழகத்திற்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலை வலியுறுத்தப்படுகிறது. இது தேர்தல் நேரங்களில் வெற்றியும் பெற்றுள்ளது.
இனிமேல் தமிழ் கடவுள் முருகனை கொண்டாடுவோர்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை, தமிழகத்தில் உருவாக வேண்டும். ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்ல முடியாதவர்கள், இனிமேல் தமிழக மக்களின் வாழ்த்துக்களை பெற முடியாது என்ற நிலை ஏற்பட வேண்டும். முருகன் கோவிலுக்கு வராதவர்கள், தமிழ் கடவுள் முருகன் என்கின்றனர்.
முருகன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், முருகன் மாநாடு நடத்தினர். தமிழுக்காக வாழ்வதாக கூறுவோர், முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனரா? ஹிந்து மத விழாக்களில் பங்கேற்றுள்ளனரா? ஏன் இந்த பாரபட்சம். இரண்டாம் தர மக்களாக ஹிந்துக்களை நினைக்கின்றனர்.
இனி பாரபட்சம் பார்க்க முடியாது. எங்களின் எழுச்சி, தமிழகத்தின் எழுச்சியாக இருக்கும். இந்த உணர்வு மேலோங்க வேண்டும்.
முருகன் மாநாட்டுக்கு அனைத்து ஆன்மிகவாதிகளும் வரவில்லை. தி.மு.க.,வினர், ரகசியமாக வந்தனர். அமைச்சர் துரைமுருகன், முருக பக்தர்; ஒளிந்து ஒளிந்து பக்தியை காட்டாமல், உண்மையான பக்தி இருந்தால், வெளிப்படையாக காட்டலாமே?
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழிசை, முன்னாள் கவர்னர்