வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோர் தகுதி சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோர் தகுதி சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 09, 2024 08:29 PM
சென்னை:'வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், தகுதி சான்றிதழ் பெறுவதற்கு ஏப்ரல், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக, ஆணையத்தின் மருத்துவ பதிவு மற்றும் நன்னெறி வாரிய இயக்குனர் ராஜ் கிருஷண் போரியா, உறுப்பினர் டாக்டர் விஜயலட்சுமி நாக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்களுக்கான திறனறி தேர்வு, இந்தாண்டு ஜூன் மாதத்தில், தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். அத்தகைய தேர்வில் பங்கேற்பதற்கு ஆணையத்தால் வழங்கப்படும் தகுதி சான்றிதழ் அவசியம்.
தகுதி சான்றிதழ் இல்லாதவர்கள், அதற்காக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஆணையத்தின் இணையதளத்தில், ஏப்., 30ம் தேதி மாலை 6:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
கடந்த முறை தகுதி சான்று கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில், பல்வேறு தவறுகள் இருந்தன. அதை தவிர்க்க, விண்ணப்பதாரர்கள் சுயமாக பூர்த்தி செய்தல் அவசியம்.
மேலும், அசல் சான்றிதழ்களை கைகளில் வைத்து விண்ணப்பங்களை நிரப்புவதுடன், தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில், தவறுகள், ஆட்சேபங்கள் குறித்த தகவல்களை அனுப்ப இயலாது.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

