'சோலார் பம்ப் செட்' அமைத்தவர்களுக்கு இலவச விவசாய மின்சாரம் கிடைக்காது
'சோலார் பம்ப் செட்' அமைத்தவர்களுக்கு இலவச விவசாய மின்சாரம் கிடைக்காது
ADDED : ஏப் 13, 2025 07:09 AM

சென்னை: விவசாய நிலங்களில், சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும், 'மோட்டார் பம்ப்' அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு, இலவச விவசாய மின் இணைப்பு தரப்படாது என, மின் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. மின்வாரியமும், அரசும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதுவரை, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
மின் இணைப்பு வழங்க அதிக தாமதம் ஆவதால், சில விவசாயிகள் சொந்த செலவில் தங்களின் நிலத்தில், 'சோலார்' எனப்படும் சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பம்ப்களை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், 'விவசாயிகள் தாங்களாகவே, சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் பம்ப் செட்களை அமைத்திருந்தாலோ அல்லது ஏதேனும் அரசு நிறுவனங்களின் மானிய உதவியுடன் அமைத்திருந்தாலோ, விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டாம்' என, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து, விவசாய கூட்டமைப்பினர் கூறியதாவது: விவசாய மின் இணைப்புக்கு பலரும் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், 'சீனியாரிட்டி' அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. இதனால், பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலை உள்ளது. மழை பெய்யவில்லை என்றாலும், விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் வகையில், சூரியசக்தி மின் திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் வாயிலாக, மத்திய அரசின் மானிய உதவியுடன், விவசாய நிலத்தில் குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றனர். அந்த மின்சாரத்தில், பம்ப் செட்டை இயக்குகின்றனர். சோலார் மோட்டார் பம்ப் செட் அமைத்திருப்பவர்களின், விவசாய மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டாம்' என்ற மின் வாரியத்தின் புதிய உத்தரவால், இலவச விவசாய மின் இணைப்பு கிடைக்காது.
இந்த உத்தரவை, மின்வாரியம் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.