சபாநாயகர், அமைச்சருக்கு எதிர்ப்பு கருப்புக் கொடியுடன் புறப்பட்டோர் கைது
சபாநாயகர், அமைச்சருக்கு எதிர்ப்பு கருப்புக் கொடியுடன் புறப்பட்டோர் கைது
ADDED : பிப் 13, 2025 07:50 PM

துாத்துக்குடி:சபாநாயகர், அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் சென்ற 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. சட்ட விதிமுறைகளை மீறி சந்தை செயல்பட்டு வருவதாகவும் அதற்கு பெறப்பட்ட நிலத்திலும் முறைகேடுகள் இருப்பதாகவும், பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான கால்கோள் விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெற்கு திட்டங்குளம் பகுதியில் எதிர்ப்பு தெரிவித்து, ஆங்காங்கே கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.
இதற்கிடையே, எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், தமிழ் பேரரசு கட்சியினர், 5வது துாண் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து கருப்பு கொடி ஏந்தி, ஊர்வலமாக தனியார் சந்தை நோக்கிச் சென்றனர். இதில் 24 பேரை கைது செய்த கோவில்பட்டி கிழக்கு போலீசார், அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

