அரசை நடத்துவோர் நீதிபதியாக முடியாது; உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா பேச்சு
அரசை நடத்துவோர் நீதிபதியாக முடியாது; உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா பேச்சு
ADDED : நவ 17, 2024 01:42 AM

சென்னை: ''அனைவருக்கும் பொருந்தக்கூடிய, ஒரே ஒரு பொதுக்கருத்து இருக்க முடியாது'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.நடராஜனின் நுாற்றாண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
தனித்துவமான கருத்து
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா பேசியதாவது:
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்ட அமைப்பின் வளர்ச்சிக்கு, பெரும் பங்காற்றியவர் நீதிபதி நடராஜன். அவரது தீர்ப்புகள், சமூக நீதியை, சமத்துவத்தை, உறுதிப்படுத்துவதாக இருந்தன.
பல நீதிபதிகள் அடங்கிய அமர்வில், அவர் தனித்துவமான கருத்தை வெளிப்படுத்தியவர். சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில், நான் அளித்த தீர்ப்புகள் நினைவுக்கு வருகின்றன.
சட்டம் இயற்றும் மக்கள் மன்றங்கள், அதை செயல்படுத்தும் அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகியவை, அதற்கென உள்ள தனித்துவங்களுடன் செயல்பட வேண்டும். அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
ஜனநாயகத்தின் முக்கிய அமைப்புகள் செயல்பட வேண்டும். ஜனாதிபதிக்கும், மாநிலங்களின் கவர்னர்களுக்கும், அரசியலமைப்பு குறிப்பிட்ட அளவுக்கு அதிகாரங்களை வழங்கி உள்ளது.
அதேநேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு, பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் முரண்பாடுகள் ஏற்பட்டு, அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வரம்பை மீறுவதாகும்
அரசை நடத்துவோர் நீதிபதியாக முடியாது. குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றவாளி என முடிவு செய்து, நீதிமன்றம் தான் தண்டிக்க முடியும்.
அதற்கு முன்னரே, அவரது வீடு அல்லது வணிக கட்டடங்களை இடிப்பது, அரசு நிர்வாகத்தின் அதிகார வரம்பை மீறும் செயலாகும். நம் அரசியலமைப்பில், இது போன்ற தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு இடமில்லை.
இத்தகைய அத்துமீறல்கள், சட்டத்தின் கடுமையான கைகளால் கையாளப்பட வேண்டும். இது தொடர்பாக, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அனைவருக்கும் பொருந்தக்கூடிய, ஒரே ஒரு பொதுக்கருத்து இருக்க முடியாது. ஜனநாயகம் என்பது, குறிப்பிட்ட நேரத்தில் வெளிப்படும் பல்வேறு கருத்துக்களில் இருந்து, ஒருமித்த கருத்தை அடைவதாகும்.
ஒரு உண்மையான ஜனநாயகத்தில், மாறுபட்ட கருத்தையோ, சிந்தனையையோ சீர்குலைக்க முடியாது. முரண்பாடாக தோன்றும் கருத்துக்களை கட்டுப்படுத்த முடியாது. நம் அரசியலமைப்பு, ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.