ஜெ.,வை எதிர்த்து கட்சி துவக்கியவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டனர்: முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேட்டி
ஜெ.,வை எதிர்த்து கட்சி துவக்கியவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டனர்: முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேட்டி
ADDED : நவ 02, 2025 10:50 PM
காரைக்குடி:  ''மறைந்த முதல்வரும், அ.தி.மு.க., பொது செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து கட்சி துவக்கியவர்கள் அடையாளம் தெரியாமல் போய் விட்டனர். அ.தி.மு.க., தோற்று போனதாக வரலாறே இல்லை,'' என, சிவகங்கை மாவட்டம் புதுவயலில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,வை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்களுடன் இணைந்துக் கொண்டு கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தால் கட்சி தலைவர் என்ன செய்ய முடியும். மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து பொதுச்செயலாளர் பழனிசாமி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதிய கட்சி துவங்கியதும் உடனடியாக உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும் என்று நினைக்காமல் மக்களுக்கு தொண்டாற்றி படிப்படியாக உயர்வுக்கு வரும் போது தான் அது நிலைக்கும். நடிகர்கள் சிவாஜி, பாக்யராஜ் போன்று எத்தனையோ பேர் புதிதாக கட்சிகளை துவங்கினர். இதுபோன்று புதிதாக கட்சி துவங்கியவர்கள் நீடித்து நிலைக்க முடியவில்லை. கட்சி மக்களிடத்தில் அறிமுகமாக வேண்டும்.
பின் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்ற பின் தன்னை தக்க வைத்துக் கொண்டு உயிர்ப்புடன் செயல்பட வேண்டும். அப்படி தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்சி அ.தி.மு.க., மட்டும் தான். இக்கட்சி எந்த கட்டத்திலும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை. ஜெயலலிதாவை எதிர்த்து கட்சி துவங்கிய பலர் காணாமல் போய் விட்டனர்.
தொண்டர்கள் பலமிக்க இயக்கம் அ.தி.மு.க., தான். அந்த தொண்டர்களில் இருந்து வந்த ஒருவர் இன்றைக்கு பொதுச் செயலாளராக இருக்கிறார். நல்லது கெட்டதை அறிந்து நல்லது பக்கம் நிற்பவர்கள் தான் அ.தி.மு.க., தொண்டர்கள் என்றார்.

