விஜயகாந்தை போல விஜயை வளைக்க முயற்சி திட்டம் போட்டு செயல்பட்டவர்கள் ஏமாற்றம்
விஜயகாந்தை போல விஜயை வளைக்க முயற்சி திட்டம் போட்டு செயல்பட்டவர்கள் ஏமாற்றம்
ADDED : நவ 21, 2024 07:28 PM
சென்னை:விஜயகாந்தை வளைத்து, கூட்டணிக்குள் ஜெயலலிதா கொண்டு வந்தது போல, நடிகர் விஜயை வளைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு போட்டியாக தே.மு.தி.க.,வை துவங்கிய விஜயகாந்த், பல்வேறு தேர்தல்களில் தனித்து போட்டியிட்டார். கடந்த 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., முதல்முறையாக கூட்டணி அமைத்தது.
அப்போது, 60 'சீட்' வரை தே.மு.தி.க., எதிர்பார்த்தது. ஆனால், 41 சீட் மட்டுமே தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்டன. தேர்தல் செலவுகளை அ.தி.மு.க., தலைமை ஏற்றுக் கொண்டதால், குறைந்த தொகுதிகளில் போட்டியிட விஜயகாந்த் சம்மதித்தார். 29 இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ளார். கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்தவர், அ.தி.மு.க., பக்கம் திரும்ப மறுத்தார்.
இதனால், அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி உருவாகும் என்ற தகவல் பரவியது. இதை உறுதிப்படுத்துவது போல, சில பேச்சுக்களும் திரைமறைவில் நடந்துள்ளன. தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியில் இருந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, வி.சி., கட்சியில் சேர்ந்து துணை பொதுச்செயலராக உள்ளார்.
லோக்சபா தேர்தலில் வி.சி., சார்பில் போட்டியிட காய் நகர்த்திய அவருக்கு, துணை முதல்வர் உதயநிதி அனுமதி மறுத்து விட்டார். இதனால், கடும் கோபத்தில் உள்ள ஆதவ் அர்ஜுனா, வி.சி., தலைவர் திருமாவளவனை முதல்வர் அல்லது துணை முதல்வர் ஆக்குவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.
இதற்காக, ஆட்சியில் பங்கு என்ற கருத்தை முன்வைத்து, தி.மு.க., கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதையறிந்ததும், வி.சி.,யின் இரண்டாம் கட்டத் தலைவர்களை வளைத்து, கட்சிக்கு சேதம் ஏற்படுத்த தி.மு.க., தரப்பில் திட்டங்கள் தயாராகின. இந்த விபரங்கள், திருமாவளவன் காதுக்கு செல்லும்படியாகவும் தி.மு.க.,வினர் சில ஏற்பாடுகளை செய்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மகன் மிதுன் ஆலோசனையின் பேரில், த.வெ.க.,வை அ.தி.மு.க., கூட்டணிக்கு இழுக்க ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விஜயகாந்தை வளைக்க ஜெயலலிதா வகுத்த பாணியில் குறைந்த 'சீட்', தேர்தல் செலவுக்கு பணம் என்ற அடிப்படையில், விஜய் தரப்பிடம் ரகசிய பேச்சு நடத்தப்பட்டது.
அதற்கு விஜய் ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டு விட்டார். இதனால், கூட்டணிக்கு முயன்றவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இதுகுறித்து, விஜய் தரப்பில் கூறப்படுவதாவது:
சினிமா நடிகர்கள் பணத்திற்கு மயங்கி விடுவர் என்ற ரீதியில், கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சு நடத்தப்பட்டது. விஜய் கடைசியாக நடிக்க உள்ள மற்றும் நடித்து வரும் படங்களுக்கான சம்பளம் முழுதையும் தேர்தல் செலவுக்கு தான் பயன்படுத்த உள்ளார். ஒவ்வொரு தொகுதிக்குமான தேர்தல் செலவு ஏற்கனவே திட்டமிடப்பட்டு உள்ளது.
எனவே, விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை விஜய், மேல்மட்ட நிர்வாகிகளிடம் கூறிவிட்டார். அதை மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என அறிவிக்கச் செய்தார்.
இவ்வாறு அந்த தரப்பு கூறியது.