சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல்; இலங்கை பயணியரிடம் விசாரணை
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல்; இலங்கை பயணியரிடம் விசாரணை
ADDED : டிச 09, 2024 04:22 AM
சென்னை : இலங்கையில் இருந்து வந்த பயணியர் நான்கு பேர், தங்களை சோதனை செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை துணை ஆணையர் சரவணன் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு, இலங்கை மற்றும் துபாயில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. அதனால், சந்தேகப்படும்படி வரும் பயணியரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை இலங்கையில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானத்தில் பயணித்த, சலீம் உள்ளிட்ட நான்கு பேரை நிறுத்தி சுங்கத்துறை துணை ஆணையர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது, சுங்கத்துறை அதிகாரிகளிடம் நான்கு பேரும் வாக்குவாதம் செய்தனர்.
'நாங்கள் ஜவுளி வியாபாரிகள்; சுற்றுலா பயணியர் போல சென்னையில் ஜவுளி வாங்கிச் செல்ல வந்துள்ளோம். எங்களிடம் எப்படி விசாரிக்கலாம்' என்று, அதிகாரிகளை மிரட்டி உள்ளனர்.
அத்துடன், அதிகாரிகள் தங்களை தாக்கி விட்டதாக, மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். அவர்களை பிடித்து, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
நான்கு பேரும் தங்களை சோதனை செய்ய விடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சுங்கத்துறை துணை கமிஷனர் சரவணன் புகார் அளித்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.