ADDED : செப் 24, 2024 07:19 AM

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா க்ளாட் ஆகியோர் நேற்று பதவியேற்றனர்.
மாவட்ட நீதிபதிகளாக பணிபுரிந்து வந்த ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா க்ளாட் ஆகியோரை, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து, கடந்த 21ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி, மூன்று புதிய நீதிபதிகளும் நேற்று மாலையில் பதவி ஏற்றனர். அவர்களுக்கு, உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எம்.சுந்தர் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும், மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மாவட்ட நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
புதிய நீதிபதிகளை வரவேற்றும், வாழ்த்தியும் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் பாஸ்கர், பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் லுாயிசால் ரமேஷ் உட்பட பலர் பேசினர்.
இதற்கு நன்றி தெரிவித்து, புதிய நீதிபதிகள் பேசினர்.
நீதிபதி ஆர்.பூர்ணிமா பேசுகையில், ''வாழ்க்கை என்பது சந்தோசமும், சவால்களும் நிறைந்தது. அதை எப்படி கையாண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என, என் பெற்றோர் சொல்லி கொடுத்துள்ளனர்.
''முதல் தலைமுறை வழக்கறிஞரான எனக்கு, நீதிபதியாக வேண்டும் என்ற உத்வேகத்தை தந்தவர் ஐகோர்ட் நீதிபதி என்.சதீஷ்குமார். அவரை பார்த்து தான் நீதிபதியாக வேண்டும் என்று உழைத்தேன். அவருக்கும், மூத்த வழக்கறிஞர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் நன்றி,'' என்றார்.
நீதிபதி எம்.ஜோதிராமன் பேசுகையில், பெற்றோர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர் வி.பி.ராஜேந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
நீதிபதி ஏ.டி.மரியா க்ளாட் பேசுகையில், 100 வயதை நெருங்கும் தந்தை அகஸ்டீன் தேவதாஸ், 95 வயதான தாய் அம்ரூசியா, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நன்றி கூறினார்.