மின் வேலியில் சிக்கி விவசாயி இறந்த வழக்கு மூவர் மீண்டும் கைது ; வனத்துறை அதிரடி
மின் வேலியில் சிக்கி விவசாயி இறந்த வழக்கு மூவர் மீண்டும் கைது ; வனத்துறை அதிரடி
ADDED : செப் 27, 2024 04:59 AM

மரக்காணம்: மரக்காணம் அருகே காட்டு பன்றியை வேட்டையாட அமைத்த மின் வேலியில் சிக்கி ஒருவர் இறந்த வழக்கில், மூன்று பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன்,56; விவசாயி. இவர், கடந்த மாதம் 17ம் தேதி தனது விவசாய நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது பக்கத்து நிலத்தில் காட்டு பன்றிகள் நுழைவதை தடுக்க வைத்திருந்த மின் வேலியில் சிக்கி, மாதவன் இறந்தார்.
பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து, மின்வேலி அமைத்த சிறுவாடி கிராமத்தை சேர்ந்த அய்யனார்,34; ராஜகுமாரன்,25; கோதண்டராமன்,38; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் காட்டு பன்றிகளை வேட்டையாடியது குறித்து, திண்டிவனம் வனத்துறையினர் சிறுவாடி பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அதில் அய்யனார், ராஜகுமாரன், கோதண்டராமன் ஆகியோர், மின் வேலி அமைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மூவர் மீதும் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த அய்யனார், ராஜகுமாரன், கோதண்டராமன் ஆகியோரை நேற்று முன்தினம் திண்டிவனம் வனசரக அலுவலர் புவனேஷ் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.

