தம்பி காதல் பிரச்னையில் அண்ணனை கொலை செய்த மூவர் கைது
தம்பி காதல் பிரச்னையில் அண்ணனை கொலை செய்த மூவர் கைது
ADDED : ஜூலை 10, 2025 06:42 AM

சாத்துார்:  விருதுநகர் மாவட்டம் சாத்துார் ஒத்தையாலில் தம்பி காதல் பிரச்னையில் அண்ணன் சங்கேஸ்வரனை25, வெட்டி கொலை செய்த விஜயபாண்டி 20, ராஜபாண்டி 21, மகேஸ்வரன் 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடிவருகின்றனர்.
சாத்துார் ஒத்தையாலை சேர்ந்தவர் சங்கேஸ்வரன். பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அவரை சிலர் வெட்டி கொலை செய்தனர்.
கொலை குறித்து போலீசார் கூறியதாவது:
சங்கேஸ்வரனின் சித்தப்பா மகன் சிங்கீஸ்வரன் 18. 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்துள்ளார். சிறுமி ஏற்கனவே கோவில்பட்டி விஜயபாண்டியுடனும் பழகியுள்ளார். இருவரிடமும் சிறுமி அலைபேசியில் பேசி வந்துள்ளார்.
சிறுமியுடன் பேசக்கூடாது என சிங்கீஸ்வரனை விஜயபாண்டி எச்சரித்துள்ளார். அவர் தனது அண்ணன் சங்கேஸ்வரனிடம் கூறியுள்ளார்.
சங்கேஸ்வரன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம் கூறியதோடு, விஜயபாண்டியுடன் சமரசம் பேசுவதற்காக தான் பணிபுரியும் பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு வரச் சொல்லி உள்ளார்.
நேற்று முன்தினம் மாலை அங்கு பேசிக்கொண்டு இருந்தபோதே விஜயபாண்டியும் அவரது நண்பர்கள் ராஜபாண்டி, மகேஸ்வரன், அபி 20, பரணி 21 ஆகியோர் சங்கேஸ்வரனை வெட்டியுள்ளனர். அவர் தப்பி ஓட முயலவே ஓட ஓட விரட்டி கொலை செய்தனர். இதை புதர் மறைவில் மறைந்திருந்த சிங்கீஸ்வரன் பார்த்துள்ளார். 3 பேரை கைது செய்துள்ளோம் .தலைமறைவாக உள்ள அபி, பரணியை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
சங்கேஸ்வரனை ஓட ஓட விரட்டி கொலை செய்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் வலைதளங்களில் பரவி வருகிறது.

