வெளிநாடுகளில் 'சைபர்' மோசடி வேலை ஒன்பது பேரை அனுப்பிய மூவர் கைது
வெளிநாடுகளில் 'சைபர்' மோசடி வேலை ஒன்பது பேரை அனுப்பிய மூவர் கைது
ADDED : டிச 08, 2024 12:41 AM
சென்னை:ஐரோப்பிய நாடுகளில், 'டேட்டா என்ட்ரி' வேலை எனக்கூறி, சைபர் மோசடி வேலைக்காக தமிழர்களை அனுப்பிய மூவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
ஐரோப்பிய நாடான செர்பியாவில், சமையல் உதவியாளர் பணி இருப்பதாக, சென்னையை சேர்ந்த அப்துல்காதர், ஆண்டனி, ஷோபா ஆகியோர் விளம்பரம் செய்தனர்.
3 லட்சம் ரூபாய்
இதையறிந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சங்கர் சர்கார் என்பவர், அந்த வேலைக்காக, 3 லட்சம் ரூபாய் பணத்தை, அவர்களிடம் கொடுத்து, ஓராண்டாக காத்திருந்தார்.
பின், லாவோஸ் நாட்டின், டிரையாங்கில் பகுதிக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு, சீன நாட்டு நிறுவனத்தில், இரண்டு ஆண்டுகளாக சங்கர் சர்கார் பணியாற்றிய நிலையில், எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த ஜேம்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது, சீன நிறுவனத்தில் சைபர் மோசடி வேலை செய்வதற்கு, ஆட்களை கொண்டு வந்தால் கமிஷன் வழங்குவதாக ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதை கேட்ட சங்கர் சர்கார், சென்னையை சேர்ந்த அப்துல்காதரை தொடர்பு கொண்டு, அவரிடம் தெரிவித்துள்ளார்.
வழக்கு பதிவு
அப்துல்காதர், திருச்சியை சேர்ந்த அவரது நண்பரான ஏஜன்ட் சையது உதவியுடன், 'டேட்டா என்ட்ரி' வேலை எனக்கூறி, ஒன்பது பேரை, லாவோஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அங்கு, ஐந்து பேரிடம் மட்டும் குடியேற்ற அனுமதிக்காக எனக்கூறி, இந்திய மதிப்பில், 84,000 ரூபாய் சங்கர் சர்கார் வசூல் செய்து, அவர்களை ஜேம்ஸிடம் ஒப்படைத்தார்.
இதற்காக, ஜேம்ஸிடம் இந்திய மதிப்பில், 24,000 ரூபாய் கமிஷனாக பெற்றுள்ளார்.
பின், ஒன்பது தமிழர்களை கட்டாயப்படுத்தி, சைபர் மோசடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துஉள்ளனர்.
இதில், பாதிக்கப்பட்ட சேலத்தை சேர்ந்த அருண் என்பவர் கொடுத்த புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், அப்துல்காதர், சையது ஆகியோர், சைபர் அடிமைத்தன வழக்கில் கைது செய்யப்பட்டனர். சங்கர் சர்காரை தேடி வந்த நிலையில், அவருக்கு எதிராக, 'லுக்அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், லாவோஸ் நாட்டிற்கு செல்ல முயன்ற அவரை, கோல்கட்டா விமான நிலையத்தில் போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.