ரூ.2.15 கோடி மோசடி சைபர் குற்றவாளிகள் மூன்று பேர் சிக்கினர்
ரூ.2.15 கோடி மோசடி சைபர் குற்றவாளிகள் மூன்று பேர் சிக்கினர்
ADDED : ஆக 28, 2025 02:24 AM

சென்னை:'பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்' எனக்கூறி, 'ஆன்லைன்' வழியே, 2.15 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மூன்று பேரை, சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன், பங்குச் சந்தை முதலீடு மோசடி தொடர்பாக, மாநிலம் முழுதும் பதிவு செய்துள்ள வழக்குகள் குறித்து, சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தின் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல், போலீசாருடன் ஆய்வு செய்தனர். அப்போது, தமிழகத்தில் பதிவான இரண்டு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள், மேற்குவங்க மாநிலத்தில் இருந்து மோசடி செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அம்மாநிலங்களுக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள், ஜவுளி வியாபாரிகள் போல வேடமிட்டு, ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, ஆன்லைன் வாயிலான பணமோசடி தொடர்பாக தேடப்பட்ட, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த, சஹசாதா ஹொசைன், 23, என்பவர், வங்கதேசம் அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் அங்கு சென்று, அவரை கைது செய்தனர். இவர், 'ஆன்லைன்' வாயிலாக, 1.64 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். மற்றொரு வழக்கில், 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த அமித் சஹா, 24 மற்றும் கமலேஷ் தேப்நாத்,36 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது, ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்தது தொடர்பாக, பல மாநிலங்களில், 35 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

