மூவர் கொலை:சி.பி.ஐ., விசாரணை கோரி கவர்னரை சந்திக்க பா.ஜ., திட்டம்
மூவர் கொலை:சி.பி.ஐ., விசாரணை கோரி கவர்னரை சந்திக்க பா.ஜ., திட்டம்
ADDED : மார் 19, 2025 07:23 PM
திருப்பூர்:பல்லடம் அருகே மூவர் கொல்லப்பட்ட வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரி, தமிழக பா.ஜ.,வினர், பொதுமக்கள் 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். அதை, தமிழக கவர்னரிடம் அளித்து, நடவடிக்கை கோர உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேமலைகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 78. இவரது மனைவி அலமேலு, 75. தம்பதியினர், தங்களு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தனர். இவர்களது மகன் செந்தில்குமார், 46. இவர்களோடு கூடவே இருந்தார்.
கடந்த ஆண்டு நவ., 28ம் தேதி தந்தை, தாய், மகன் மூவரையும் வீட்டில் வைத்து கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இதன் மீதான விசாரணைக்காக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல கட்டமாக விசாரணை நடத்தியும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நூறு நாட்களைக் கடந்தும் விசாரணையில் தொடர்ந்து தொய்வு இருந்ததால், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்ய மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியது தமிழக பா.ஜ., கடந்த ஜன., மாதம் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். கடந்த, இரண்டு மாதங்களாக, 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளன.
இம்மாத இறுதிக்குள் கவர்னரை சந்திக்க அனுமதி வாங்கி, 50 ஆயிரம் கையெழுத்துடன், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரும் மனு கொடுக்க உள்ளனர்.