சைபர் மோசடி கும்பலுக்கு உடந்தை; திருப்பூரைச் சேர்ந்த மூவர் கைது!
சைபர் மோசடி கும்பலுக்கு உடந்தை; திருப்பூரைச் சேர்ந்த மூவர் கைது!
ADDED : ஜன 23, 2025 05:00 PM

கோவை: கோவையைச் சேர்ந்தவரிடம் 43 லட்சம் ரூபாய் மோசடி செய்த இணைய குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த திருப்பூரைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கி கணக்குகளில் அதிகப்படியாக பணம் வைத்திருப்பவர்களை குறி வைத்து, இணைய மோசடி செய்வது நாளைக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீஸ் அதிகாரிகள் என்றும், சிபிஐ அதிகாரி என்றும், சுங்கத்துறை அதிகாரி என்றும், மும்பை குற்றப்பிரிவு போலீஸ் உயர் அதிகாரி என்றும்,பல்வேறு பெயர்களில் இந்த மோசடி கும்பல் தொடர்பு கொள்கின்றனர். கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்வாறு போன் செய்த மர்ம நபர், தான் சிபிஐ அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் உரிமையாளர் நரேஷ் கோயலின் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் உங்களுடைய ஆதார் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அச்சுறுத்தியுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி, ஆதார், பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை பெற்றுள்ளார். போனில் பேசுபவர் மோசடி ஆசாமி என்று அறியாத நிலையில் இருந்த கோவைக்காரர்,தனக்கு ஏதாவது சிக்கல் வந்துவிடும் என்ற அச்சத்தில், அந்த நபர் கேட்ட விபரங்கள் அனைத்தையும் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த விபரங்களை பயன்படுத்தி, அவரது வங்கி கணக்கில் இருந்த 43 லட்சம் ரூபாய் பணத்தை திருடி விட்டனர். அதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டது கோவைக்காரருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.
விசாரணை நடத்திய போலீசார், சைபர் குற்றவாளிகள் திருடிய 43 லட்சம் ரூபாய் பணம் எங்கெங்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது என்று கண்டறிந்தனர்.திருப்பூரைச் சேர்ந்த ரகுநாதன்,61, மயில்சாமி,43, செந்தில்குமார், 41, ஆகியோர் வங்கி கணக்குகளில் அந்த பணம் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள், சைபர் குற்றவாளிகள் மோசடி செய்யும் பணத்தை பதுக்கி வைத்து வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்ற வசதியாக 12க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகளை துவங்கி, உதவி செய்துள்ளனர்.கமிஷனுக்கு ஆசைப்பட்டு இவ்வாறு செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.கைதான நபர்கள் கொடுத்த விவரங்கள் அடிப்படையில் மோசடி பேர்வழிகளை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.