ரூ.50,000க்கு குழந்தை விற்பனை தாய் உட்பட மூவரிடம் விசாரணை
ரூ.50,000க்கு குழந்தை விற்பனை தாய் உட்பட மூவரிடம் விசாரணை
ADDED : ஜூலை 07, 2025 06:01 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் 50,000 ரூபாய்க்கு பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட மூவர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் பிரியலட்சுமி, 22. இவர் கணவரை பிரிந்து, தன் 4 வயது மகளுடன், நாகப்பட்டினம் மாவட்டம் மணக்குடியில் வசித்து வருகிறார்.
இவருக்கு, 2023 நவ., 13ல், திருத்துறைப்பூண்டி தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த ஒரு சில மாதங்களில், அந்த குழந்தை அவரிடம் இல்லை. இதையறிந்த நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித்குமார் விசாரித்தபோது, குழந்தையை, ஈரோடைச் சேர்ந்த சரோ, சரவணன் ஆகியோரிடம், 50,000 ரூபாய்க்கு விற்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
குழந்தையின் தந்தை பெயரை சரவணன் என பதிவு செய்து, குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது.
நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித்குமார், போலீசில் புகார் செய்தார்.
திருத்துறைப்பூண்டி போலீசார், குழந்தையை மீட்டு, நாகப்பட்டினம் அரசு காப்பகத்தில் ஒப்படைத்து, பிரியலட்சுமி, சரோ, சரவணன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.