ADDED : செப் 16, 2026 05:59 AM

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி யம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார் 27. 2025 ஜூன் 27-ம் தேதி மடப்புரம் கோயிலுக்கு வந்த நிகிதா என்பவர் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தார். இப் புகாரின் பேரில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. தனிப்படை போலீசார் ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன், பிரபு, கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அனை வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் சி.பி.ஐ., தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அப்போதைய மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்.ஐ., சிவக்குமார், ஏட்டு இளையராஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு மதுரை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நீதிமன்றம் உத் தரவுபடி, கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட டிஎஸ்பி உட்பட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே டி.எஸ்.பி., சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்.ஐ., சிவக் குமார், ஏட்டு இளையராஜா ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி அபிஷேக்குப்தா உத்தரவிட்டார்.
