புலிகள் கணக்கெடுப்பு நாளை முதல் துவக்கம் வனத்துறை அறிவிப்பு
புலிகள் கணக்கெடுப்பு நாளை முதல் துவக்கம் வனத்துறை அறிவிப்பு
ADDED : ஜன 04, 2026 02:25 AM

சென்னை: 'தமிழகத்தில், இந்த ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு, நாளை முதல் துவங்க உள்ளது' என, வனத்துறை அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வன உயிரின அமைப்பு ஆகியவை இணைந்து, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, தேசிய அளவில் புலிகள் கணக்கெடுப்பை நடத்தும். உலக அளவில் நடத்தப்படும், மிக பெரிய வன உயிரின கணக்கெடுப்பு இது. இந்த நடைமுறையில், ஆறாவது நிகழ்வாக, 2026ல் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் முடிவுகள், 2027ல் வெளியிடப்படும்.
தமிழகத்தில், 2018ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 264 புலிகள் இருப்பது தெரியவந்தது. அதன் பின், 2022ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 306 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பின் முதற்கட்டம், ஜன., 5ம் தேதியான நாளை துவங்க உள்ளது. பிப்., மாதம் இறுதி வரை, முதற்கட்ட புலிகள் கணக்கெடுப்பு நடக்கும்.
தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு - முண்டந்துறை, மேகமலை - ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய புலிகள் காப்பகங்களை உள்ளடக்கிய, 29 வனக்கோட்டங்களில், இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் புலிகள் எண்ணிக்கையை கண்டறிவது பிரதானமாக இருந்தாலும், சிறுத்தைகள், கழுதைப்புலி, காட்டுமாடு, மான் ஆகியவற்றின் விபரங்களும் சேகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
