கோவை வனப்பகுதியில் புலி நடமாட்டம் உறுதி... கேமராவில் பதிவான 'திகில்' காட்சி!
கோவை வனப்பகுதியில் புலி நடமாட்டம் உறுதி... கேமராவில் பதிவான 'திகில்' காட்சி!
ADDED : அக் 29, 2024 11:45 AM

கோவை: கோவை வனப்பகுதியை ஒட்டிய ஊர்களில் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எத்தனை புலிகள் இருக்கின்றன என்பதை அறிய 400 தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
கோவையை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்படும். யானைகள், புலி, சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்யும் வனத்துறையினர் அவற்றை பிடித்து பாதுகாப்பாக அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிடுவர்.
இந்நிலையில் கோவையை ஒட்டிய வனப்பகுதியில் புலிகள் நடமாடி வருவதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். போளுவாம்பட்டி, காரமடை, மதுக்கரை பகுதிகளில் புலிகள் நடமாட்டம் சில மாதங்களாக தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தி உள்ள வனத்துறையினர், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறி இருப்பதாவது;
போளூவாம்பட்டி, காரமடை, மதுக்கரை பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான இடங்களில் கேமராவை பொருத்தி உள்ளோம். இவற்றை பொருத்தும் முன்பு உரிய முறையில் ஆய்வு செய்துள்ளோம். அப்போது தான் ஒரு புலியின் நடமாட்டத்தை கண்டறிந்துள்ளோம். மொத்தம் 800 இடங்களில் கேமரா பொருத்தும்படி வல்லுநர்கள் அறிவுறுத்தினர்.அதன் அடிப்படையில் இன்னும் 400 இடங்களிலும் கேமராக்களை நிறுவ இருக்கிறோம். ஒட்டுமொத்த இடங்களிலும் கேமராக்களை முழுவதுமாக பொருத்திய பின்னரே எத்தனை புலிகள் இருக்கின்றன என்பதை சரியாக அறியமுடியும்.
புலிகள் நடமாடினால் வனப்பகுதி ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.
இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.