என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஆஜராக சீமான் கட்சி நிர்வாகிக்கு அவகாசம்
என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஆஜராக சீமான் கட்சி நிர்வாகிக்கு அவகாசம்
ADDED : பிப் 03, 2024 12:41 AM
சம்மனுக்கு ஆஜராக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகார்த்திக் தாக்கல் செய்த மனு:
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனத்தில் என் வசிப்பிடம் உள்ளது. சென்னையில் உள்ள கட்சி அலுவலக முகவரியில், எனக்கு சம்மன் வந்துள்ளது.
திருச்சியில் நடக்கவுள்ள போராட்டத்தில் பங்கேற்கச் செல்கிறேன். அதை தடுக்கும் விதமாக, சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின்அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் வந்துள்ளது.
போதிய அவகாசம் வழங்கி சம்மன் அனுப்பினால், ஆஜராக தயாராக உள்ளேன். எனவே, தற்போது அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். அதுவரை, நோட்டீஸ் தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
இம்மனுவை அவசரமாக விசாரிக்க கோரியதன்படி, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு, விசாரணைக்கு எடுத்தது. வழக்கறிஞர்கள் சேவியர் பெலிக்ஸ், சங்கர் ஆஜராகி, 'காலையில் சம்மன் அளித்து விட்டு, அன்றே ஆஜராகும்படி கூறுகின்றனர். வெளியூரில் உள்ளவர்களுக்கும், காலையில் சம்மன் அனுப்பி அன்றே சென்னையில் ஆஜராகும்படி கூறுகின்றனர். இதை ரத்து செய்ய வேண்டும்' என்றனர்.
தேசிய புலனாய்வு முகமை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, ''வரும் 5ம் தேதி ஆஜராக, மனுதாரர் அவகாசம் கேட்டுள்ளார். அதை ஏற்று, 5ம் தேதி ஆஜராகலாம் என்று தெரிவித்துள்ளோம். சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.
இதையடுத்து, வழக்குவிசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
நானே ஆஜராவேன்!
நாங்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடவில்லை. வெளிநாடுகளில் இருந்து விடுதலை புலிகள்அமைப்பினர் எங்களுக்கு நிதியுதவிசெய்வதாக கூறினர். தற்போது, நாங்கள் அந்த அமைப்பை புனரமைக்க நிதி திரட்டி கொடுப்பதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள்கூறுகின்றனர்.
எங்கள் கட்சி அலுவலகத்தில் தங்கியுள்ள நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கிற்கு, பிப்., 5ல் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். அன்று நானே விசாரணைக்கு ஆஜராவேன்.
அதிகாரிகளுக்கு ஏதேனும் சந்தேகம்இருந்தால், என்னைத்தானே கேட்க வேண்டும். என்னை விட்டுவிட்டு, சாதாரண நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்துவதுசரியல்ல. இந்த சோதனைக்கு பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது.
- சீமான்
தலைமைஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

