ஓட்டுப்பதிவை இணையத்தில் பதிவேற்ற 12 மணி வரை அவகாசம்: கலெக்டர் தகவல்
ஓட்டுப்பதிவை இணையத்தில் பதிவேற்ற 12 மணி வரை அவகாசம்: கலெக்டர் தகவல்
ADDED : பிப் 06, 2025 01:50 AM
ஈரோடு:''ஓட்டுப்பதிவு விபரம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய இரவு, 12:00 மணி வரை கால அவகாசம் உள்ளது,'' என, கலெக்டர் தெரிவித்தார்.
ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், எவ்வித பிரச்னை இன்றி சுமூகமாக நடந்து முடிந்தது. ஓட்டுப்பதிவு விபரம், சதவீதம் ஆகியவை ஓட்டுச்சாவடி வாரியாக கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இணையத்தில் பதிவேற்ற, 12 மணி வரை அவகாசம் உள்ளது. அதற்குள் இறுதி ஓட்டுப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும்.
பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'சீல்' வைத்து, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவை, ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.
கள்ள ஓட்டு போடப்பட்டதாக ஒரே ஒரு புகார் மட்டும் வந்தது. ஆனால், கள்ள ஓட்டுப்போட வாய்ப்பில்லை. ஓட்டுப்பதிவுகள் அனைத்தும், முகவர்கள் முன்னிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்புதான் நடக்கிறது. எனவே தவறுக்கு வாய்ப்பில்லை.
நாளை (இன்று) காலை, 11:00 மணிக்கு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் ஓட்டுச்சாவடி வாரியாக பரிசீலனை நடைபெறும். ஓட்டுப்பதிவில், 14 இடங்களில் மட்டும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டு, அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டது.
இவ்வாறு கூறினார்.