திருச்செந்தூர் கோவில் விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்: எச்.ராஜா வலியுறுத்தல்
திருச்செந்தூர் கோவில் விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்: எச்.ராஜா வலியுறுத்தல்
ADDED : நவ 02, 2024 01:19 PM

திருச்செந்தூர் கோவிலில் கடந்த ஆறு வருடங்களாக பௌர்ணமி அன்று கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி கடலுக்கு ஆரத்தி எடுத்து அதன்பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிலா சோறு சாப்பிட்ட பிறகு அன்று இரவு கடற்கரை மற்றும் கோவிலின் வெளியே சுற்றுப்புறங்களில் தங்கியிருந்து அதிகாலையில் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி விட்டு முருகப்பெருமானை வழிபட்டு வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியத்தாலும், கோவில் நிர்வாகத்தின் மெத்தனமான போக்கிலும் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சந்திக்கும் சவால்கள் :
பௌர்ணமி நாளன்று திருச்செந்தூர் நகருக்கு வெளியே நான்கு கிலோ மீட்டருக்கு முன்னரே திருக்கோவிலுக்கு வரும் வாகனங்களை போலீசார் ஓரமாக நிறுத்த சொல்லி விடுகின்றனர்.
போலீசார் வாகனங்களை நிறுத்த சொன்ன இடத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கோவிலுக்கு கால்நடையாக செல்லச் சொல்லி போலீசார் பக்தர்களை கட்டாயப் படுத்துவதாக தகவல்கள் வருகின்றன.
இதுகுறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால் அவர்கள் மிகவும் தரக்குறைவாக நடத்தப்படுவதாக பக்தர்கள் வேதனைப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் இது ஒன்றுதான் முருகன் கோவிலா? திருச்செந்தூர் கோவிலுக்கு பௌர்ணமி அன்று வரவில்லை என்றால் உங்கள் குடி முழுகிவிடுமா என பல வகையான கீழ்த்தரமான கேள்விகளையும், வருகின்ற பக்தர்களை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் ஏன் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து எங்கள் உயிரை வாங்குகின்றீர்கள் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சரமாரியாக தங்களை திட்டுவதாக பக்தர்கள் தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பக்தர்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் கடற்கரைக்கும் செல்ல பிரதான போக்குவரத்து வசதி என்றால் அது ஷேர் ஆட்டோ பயணம் தான். பெளர்ணமி தினத்தன்று பக்தர்கள் கஷ்டப்பட வேண்டும் என்றே சில நேரங்களில் ஷேர் ஆட்டோக்களையும் இயங்க அனுமதிக்காமல் பக்தர்களை அவதிக்கு உள்ளாக்குவதாக பக்தர்கள் புலம்பி புலம்புகின்றனர்.
கோவில் நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானம் என்று பல கோடிகள் வருவாய் ஈட்டினாலும் பக்தர்களுக்கு என்று கோவில் நிர்வாகம் சார்பாக பேட்டரி கார், மினி பஸ் என்று பக்தர்கள் பயன்பாட்டுக்கு பொது போக்குவரத்து வாகன ஏற்பாடுகள் எதுவும் செய்வதில்லை.
பெளர்ணமி வழிபாட்டுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தற்காலிக கழிப்பிடங்கள் மற்றும் தரமான குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை.
விஐபி தரிசனம் பௌர்ணமி அன்று ரத்து என்று வெளியே பத்திரிக்கைகளில் செய்தியாக சொல்லப்பட்டாலும் கோவில் உடைய தக்கார் (திருமதி கனிமொழி கருணாநிதியின் நண்பர்) திரு அருள்முருகன் ஆசியுடன் அவருடைய PA மட்டும் 500 பாஸ்கள் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கள்ள சந்தையில் பாஸ்களை விற்று இலட்சக்கணக்கான ரூபாயை அப்பாவி பக்தர்களிடம் இருந்து அடாவடியாக வசூலித்துக் கொண்டிருக்கின்றனர் என பக்தர்களிடம் இருந்து வேதனையோடு விமர்சனங்களும் வருகின்றன.
பக்தர்களும் சாமி தரிசனம் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் வேறு வழி இல்லாமல் பணத்தை இழந்து திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்யவேண்டிய அவலநிலை நிலவுதாக ஆன்மீக அன்பர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
8000 பேருக்கு மேல் பக்தர்களுக்கு உணவு கொடுக்கும் வசதி திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்திற்கு கிடையாது. நிறைய தன்னார்வ அமைப்புகள் கடற்கரையில் முன் அனுமதி பெற்று அன்னதானம் வழங்கி வந்ததையும் தற்போது கடற்கரையில் வைத்து அன்னதானம் வழங்கக் கூடாது என்று போலீசாரை வைத்து மிரட்டி கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் தாமாக முன்வந்து கொடுத்து வந்த அன்னதானத்தையும் நிறுத்திவிட்டதாக பக்தர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
தன்னார்வ அமைப்புகள் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் மேல் உணவு கொடுக்கும் சேவையை இதுவரை பக்தர்களுக்கு செய்து வந்தார்கள். கோயில் நிர்வாகம் அதை தடுத்து நிறுத்தியதால் பக்தர்களுக்கு உணவு கிடைக்காமல் திணறுவதை கண்கூடாக பார்க்கலாம்.
நீருக்கு நன்றி சொல்லும் விதமாக கடந்த ஆறு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த கடல் ஆரத்தியையும் போலீசாரை வைத்து கோவில் நிர்வாகம் தற்போது தடுத்து நிறுத்தி விட்டது.
ஏன் என்று பக்தர்கள் ஒன்று கூடி கேட்டபோது ஆகம விதிப்படி கடல் ஆர்த்தி எடுக்கக் கூடாது என்று திமுக சார்பாக தக்காராக நியமிக்கப்பட்டுள்ள திரு அருள்முருகன் கூறியதாக போலீசார் தெரிவித்தாக கடல் ஆரத்திக்கு சென்று திரும்பிய பக்தர்கள் புலம்பி வருகின்றனர்.
கோயிலுக்கு வெளியே ஆகம விதி கிடையாது கோயிலுக்கு வெளியே ஆகம விதி கிடையாது என்பதை நிர்வாகத்துக்கு எடுத்து சொல்லியும்,கடல்சார் நிர்வாகம் என்பது மத்திய அரசாங்கத்தின் நிர்வாக வரம்பிற்குள் வரக்கூடிய விஷயம் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள பக்தர்கள் வலியுறுத்தியதையும் ராமேஸ்வரம் கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பாகவே கடல் ஆர்த்தி இன்று வரை எடுக்கப்பட்டு வருவதை பக்தர்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் அதன்பிறகும் கோவில் நிர்வாகம் பொது மக்களின் கடல் ஆர்த்தி சம்பந்தமான கோரிக்கையை நிராகரித்திருக்கிறது.
பொதுமக்களும் வேறு வழியில்லாமல் தனித்தனியே தாங்களாகவே கடல் ஆர்த்தி எடுக்க ஆரம்பித்ததை எதிர்பார்க்காத நிர்வாகம் அதையும் கோவில் ஊழியர்களை வைத்து பொதுமக்கள் ஏற்றிய ஆரத்தியை காலால் அனைத்தும் அந்த இடத்தை விட்டு பக்தர்களை அப்புறப்படுத்தவும் தொடர்ந்து இரண்டு மாதங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
வருகின்ற பக்தர்களுக்கு அறவே குடிநீர் வசதி செய்து கொடுக்காத நிர்வாகம், பக்தர்களுக்கு உணவு கூட கொடுக்காத நிர்வாகம், கழிவறை வசதிகள் என அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காத இந்து சமய அறநிலயத்துறை நிர்வாகமும், ஆலய நிர்வாகமும் ஒரு விஷயத்தில் மட்டும் மிகத் தெளிவாக இருக்கின்றனர் என்பது தெரிகிறது.
எந்த அளவிற்கு பக்தர்களை தாமதப்படுத்தி திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விடாமல் அனுப்பலாம் என்பதில் மட்டும் கோவில் நிர்வாகம் மிகத் தெளிவாக உள்ளது.
பௌர்ணமி இரவு
தரிசனம் செய்வதற்கு ஏறத்தாழ ஏழிலிருந்து ஒன்பது மணி நேரம் வரை பக்தர்களை ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் காக்க வைக்கின்றது நிர்வாகம்.இவ்வளவு தொந்தரவுகளை பக்தர்களுக்கு கொடுத்தோம் என்றால் அவர்களாகவே இனிமேல் நாம் ஏன் திருச்செந்தூர் கோவிலுக்கு வரவேண்டும் என சங்கடப்படும் அளவிற்கு உச்சகட்ட அராஜகம் கோயிலுக்குள்ளே நடந்து கொண்டிருக்கின்றது.பௌர்ணமி இரவு மட்டும் பல லட்சக்கணக்கான பேர் திருச்செந்தூர் மண்ணில் திரண்டு வருவதை பொறுக்க முடியாமல் திராவிட மாடல் விடியா அரசு கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலியாக மாறி பக்தர்களுக்கு நல்லது செய்ய வேண்டிய அரசு பக்தர்களை கோவில் அருகே வரவே கூடாது என்கின்ற எண்ணத்துடன் செயல்படுவது தான் வேதனையின் உச்சகட்டம்.
எதிர்பார்ப்புகள்
தமிழக அரசிடம் இருந்தும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திடம் இருந்தும் பக்தர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் :
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நல்ல கழிவறை வசதி, குறைந்த நேரத்தில் சாமி தரிசனம், தொலைதூரத்தில் இருந்து நடந்து செல்ல சொல்லி வற்புறுத்தாமல் கோயில் அருகே வரை வாகனங்களில் அனுமதிப்பது, கடல் ஆரத்தியை அனுமதிப்பது, தன்னார்வ அமைப்புகள் அன்னதானம் கொடுக்க அனுமதிப்பது என போலீசார் பக்தர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
உடனடியாக தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். இதைவிட அதிக கூட்டம் உள்ள திருப்பதி திருமலையில் எப்படி நிர்வாகம் நடைபெறுகின்றது. ஆந்திர மாநில அரசும், திருப்பதி தேவஸ்தானமும் எப்படி செயல்படுகிறது என்பதை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்து பாடம் கற்க செய்யவேண்டும்.