ADDED : பிப் 16, 2024 12:57 AM
சென்னை:செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழின் செவ்விலக்கி யங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பதிப்பிக்கப்படுகின்றன.
புத்தகங்களை வாங்கி படிப்போருக்கு மட்டுமின்றி, இணைய வழியில் திருக்குறளை படிக்க விரும்பும் வேற்று மொழி வாசகர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், அந்நிறுவனம் பல்வேறு பணிகளை செயல்படுத்துகிறது.
அதில் முக்கியமாக, திருக்குறளை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து, 'www.cict.in' என்ற இணையதளத்தில் பதிவேற்ற உள்ளது.
அதை, அந்தந்த மொழி தெரிந்தோர், குறளை எழுத்து வடிவில் படிக்கவும், ஒலி வடிவில் கேட்கவும் முடியும். இதற்காக, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் குரல் பதிவும் செய்யப்பட உள்ளது.
இந்த சேவைகள் அனைத்தையும், வரும் ஜூன் மாதத்துக்குப் பின், வாசகர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.