திருப்பதி - சிக்மகளூரு புதிய ரயில் ஜோலார்பேட்டை வழியாக வரும் 17ல் துவக்கம்
திருப்பதி - சிக்மகளூரு புதிய ரயில் ஜோலார்பேட்டை வழியாக வரும் 17ல் துவக்கம்
ADDED : ஜூலை 10, 2025 10:44 PM
சென்னை:திருப்பதியில் இருந்து, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, சிக்மகளூருக்கு புதிய வாராந்திர ரயில் சேவை, வரும் 17ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து, தமிழகம் வழியாக, கர்நாடக மாநிலம் சிக்மகளூருக்கு, புதிய ரயில் சேவையை துவக்க வேண்டும் என்ற, தெற்கு ரயில்வேயின் பரிந்துரையை ஏற்று, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, திருப்பதியில் இருந்து சிக்மகளூருக்கு வாரந்திர ரயில் சேவை, வரும் 17ம் தேதி துவங்குகிறது.
திருப்பதியில் இருந்து வாரந்தோறும், வியாழன் இரவு 9:00 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், மறுநாள் காலை 10:30 மணிக்கு சிக்மகளூருக்கு செல்லும்.
மறு மார்க்கமாக, சிக்மகளூரில் இருந்து, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், மறுநாள் காலை 7:40 மணிக்கு திருப்பதி செல்லும்.
இந்த புதிய ரயில், தமிழகத்தில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.