திருப்பதி - ராமேஸ்வரம் ரயில் இனி போளூர் ஸ்டேஷனில் நிற்கும்: பிரதமருக்கு அமைச்சர் எல் முருகன் நன்றி
திருப்பதி - ராமேஸ்வரம் ரயில் இனி போளூர் ஸ்டேஷனில் நிற்கும்: பிரதமருக்கு அமைச்சர் எல் முருகன் நன்றி
ADDED : டிச 19, 2025 10:42 PM

சென்னை: திருப்பதி - ராமேஸ்வரம் ரயில் போளூர் ரயில் நிலையத்தில் நிறுத்த நடவடிக்கை எடுத்ததற்கு பிரதமர் மோடிக்கும், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் நன்றி தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
வாரத்தில் மூன்று நாட்கள் திருப்பதி - ராமேஸ்வரம் இடையில் இயக்கப்படும் ரயிலானது, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில் நிலையத்தில் இனி நின்று செல்லும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் முருகன் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பதி- ராமேஸ்வரம் இடையிலான ரயில், போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் முன்வைத்திருந்தேன்.
திருப்பதி முதல் ராமேஸ்வரம் வரையிலான வழித்தடத்தில் இயங்கும் இந்த ரயில், போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால், வர்த்தக ரீதியிலும், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உதவும் என்பதை கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, போளூர் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக மக்களிடத்திலிருந்து வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் மோடிக்கும், தமிழக மக்களின் கோரிக்கை ஏற்று விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கும், தமிழக மக்கள் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வாறு அந்த அறிக்கையில் முருகன் கூறியுள்ளார்.

