திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தர்கா நிர்வாகம் மேல்முறையீடு
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தர்கா நிர்வாகம் மேல்முறையீடு
UPDATED : நவ 06, 2026 07:12 PM
ADDED : நவ 05, 2026 06:47 PM
–சிறப்பு நிருபர்–
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள கல் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, கடந்த ஜனவரியில் தீர்ப்பளித்தது.
அதில், ‘கடந்த, 1920ம் ஆண்டு நடந்த மூல வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா மற்றும் கொடிமரம் மட்டுமே தர்காவுக்குச் சொந்தமானவை. மீதமுள்ள ஆக்கிரமிக்கப்படாத மலைப் பகுதி கோவில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமானது’ என, உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
மேலும், ‘பாதுகாப்பான முறையில் தொல்லியல் துறையின் அனுமதியுடன் குறிப்பிட்ட கல் துாணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்’ என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், தர்கா நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதாக வரலாற்றில் எந்தவொரு சான்றும் இல்லை. கார்த்திகை தீபம் பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்தில்தான் ஏற்றப்பட்டு வருகிறது.
கடந்த, 1920-ம் ஆண்டு வழங்கப்பட்ட மூல வழக்கின் தீர்ப்பின்படி, தர்கா மற்றும் கொடிமரம் அமைந்துள்ள மலை உச்சிப் பகுதி முழுமைக்கும் தர்கா நிர்வாகமே உரிமையாளர் என தீமானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
