திருப்பூர் ஆடை ஏற்றுமதி மந்தம் :உதவி கேட்கும் தொழில் துறையினர்
திருப்பூர் ஆடை ஏற்றுமதி மந்தம் :உதவி கேட்கும் தொழில் துறையினர்
ADDED : டிச 21, 2025 01:33 AM

திருப்பூர்:அமெரிக்காவின் அதிக அளவிலான வரி விதிப்பால், செப்., மற்றும் அக்., மாத ஆடை ஏற்றுமதி மந்தமாகியுள்ளது. எனவே, அரசின் உடனடி உதவியால் மட்டுமே, ஏற்றுமதி தொழிலை மீட்டெடுக்க முடியும் என, தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின், இறக்குமதி வரி உயர்வு, ஆக., மாத இறுதியில் நடைமுறைக்கு வந்தது; கடந்த அக்., மாத ஏற்றுமதி புள்ளிவிபரங்களை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு பின்னலாடை ஏற்றுமதி, 26 சதவீதம் குறைந்துள்ளது. வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 22.4 சதவீதமும், ஓவன் ஆடை ஏற்றுமதி 12 சதவீதமும் குறைந்துள்ளது.
அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதி, கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் ஏப்., முதல் அக்., வரை, 22,827 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் இதேகால கட்டத்தில், 23,089 கோடி ரூபாயாக சிறிதளவு மட்டுமே அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில், இது குறையவும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து 'இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்' கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
பழைய ஒப்பந்தங்கள் விரைவில் முடிந்துவிடும் என்பதால், அமெரிக்க வாடிக்கையாளர்களை தக்கவைக்க, ஏற்றுமதியாளர்கள் அதிக தள்ளுபடி சலுகை வழங்கி நஷ்டத்தில் இயங்கி வருகின்றனர். சீனா உள்ளிட்ட போட்டி நாடுகளால், ஆர்டர் வரத்து குறைய வாய்ப்புள்ளது.
சீனா, வங்கதேசம், 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளதால், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் சவால் நிறைந்ததாக உள்ளது.
கம்போடியா, வியட்நாம் நாடுகளும், 5 சதவீத சந்தையை கைப்பற்றியுள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்தான், ஐரோப்பிய ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.விரைவில், அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே, ஏற்றுமதி வர்த்தகம் சரியாமல் அமெரிக்க ஆடை சந்தையை தக்க வைக்க முடியும். முதற்கட்டமாக, 25 சதவீத வரி குறைப்பு செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

