திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 5 மாதங்களில் ரூ.18,238 கோடி; நாட்டின் ஏற்றுமதியில் 61 சதவீதம்
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 5 மாதங்களில் ரூ.18,238 கோடி; நாட்டின் ஏற்றுமதியில் 61 சதவீதம்
UPDATED : அக் 29, 2025 10:25 AM
ADDED : அக் 29, 2025 03:04 AM

திருப்பூர்: நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாதங்களில், திருப்பூரில் இருந்து, 18,238 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.
இந்தியாவின் பின்னலாடை தொழிலின் தலைநகராக விளங்குகிறது திருப்பூர். நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 61 சதவீதம் திருப்பூரில் நடக்கிறது. கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி, 65,178 கோடி ரூபாயாகவும், அதில், திருப்பூரின் ஏற்றுமதி, 39,618 கோடி ரூபாயாகவும் இருந்தது. முந்தைய ஆண்டில் 55,798 கோடி ரூபாயாகவும், திருப்பூரின் ஏற்றுமதி, 33,045 கோடியாகவும் இருந்தது. நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் ஆக., வரை, ஐந்து மாதங்களில், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி, 29,899 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டின், திருப்பூரின் முதல் ஐந்து மாத பின்னலாடை ஏற்றுமதி, 16,222 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டில், 18,238 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 61 சதவீத பங்களிப்புடன், திருப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
'அமெரிக்க வரி உயர்வு பிரச்னை, செப்., மாத ஏற்றுமதியில் இருந்துதான், ஏற்றுமதியில் எதிரொலிக்க துவங்கியிருக்கிறது. விரைவில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் உருவாக வாய்ப்புள்ளதால், டிச., அல்லது ஜன., மாதத்தில் இருந்து ஏற்றுமதி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பக்கூடும்,' என்றனர்.

