வங்கதேசத்தவர் ஊடுருவல் எதிரொலி திருப்பூர் பனியன் நிறுவனங்கள் 'அலெர்ட்'
வங்கதேசத்தவர் ஊடுருவல் எதிரொலி திருப்பூர் பனியன் நிறுவனங்கள் 'அலெர்ட்'
ADDED : செப் 28, 2024 02:07 AM

திருப்பூர்:மேற்கு வங்கம் மாநிலம், 'பர்கானாஸ் 24' மாவட்டம் வழியே இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர், விதிகளை மீறி தமிழகத்துக்குள் பதுங்கி வாழ்வதால் போலீசார் தேடுதல் வேட்டையை வேகப்படுத்தியுள்ளனர்.
இதனால், எவ்வித ஆவணங்களும் இல்லாமல் திருப்பூரில் வசித்த வங்கதேச இளைஞர்களை போலீசார் தினமும் கைது செய்து வருகின்றனர்.
எச்சரிக்கை
பனியன் தொழில் அனுபவம் உள்ள வங்கதேச மக்கள், விதிகளை மீறி திருப்பூருக்கு வந்து சேர அதிக வாய்ப்புள்ளது. ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், வாடகை வீடு எளிதாக கிடைக்கும் என்பதாலும், திருப்பூருக்கு வந்து வசதியாக தங்கிக் கொள்கின்றனர்.
மத்திய அரசிடம் இருந்து எச்சரிக்கை கிடைக்கப் பெற்றதும், மாநகர போலீசார் தொழில் துறையினரை, 'அலெர்ட்' செய்துள்ளனர். அதன்படி, முன்பின் அறிமுகம் இல்லாத வெளிமாநில மக்களை பணிக்கு எடுப்பதில் சில கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேற்கு வங்கத்தில் இருந்து வருவோரை பணிக்கு எடுக்கும் போது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆவணங்களை சரிபார்த்து எடுக்க வேண்டும்.
சந்தேகத்துக்கு இடமானநபர்கள் வந்தால், போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தொழிலாளர் பற்றாக்குறையை சாதகமாகப் பயன்படுத்தி, வங்கதேச இளைஞர்கள் மறைந்து வாழ திருப்பூருக்கு வருகின்றனர். வீடு வாடகைக்கு கொடுப்போர், கவனமாக விசாரித்து கொடுக்க வேண்டும்.
கவனம்
போலீஸ் அறிவுறுத்தியபடி, பணியாளர் நியமனத்தில் பல்வேறு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இரண்டுக்கு மேற்பட்ட ஆவணங்களை சரிபார்த்த பின்னரே வேலைக்கு எடுக்கிறோம்.
இதற்கு முன் பணியாற்றும் தொழிலாளர் வாயிலாக வருவோரை மட்டுமே தணிக்கை மூலமாக பணிக்கு எடுக்கிறோம்.
முன் அனுபவம் இல்லாத வங்கதேசத்தினர், குறிப்பாக சாய ஆலைகளை தேர்வு செய்து பணியில் சேர்வதாக தகவல் கிடைத்துள்ளது. சாய ஆலைகள் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் 'அலெர்ட்' செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில், எளிதாக போலி ஆதார் தயாரித்து, தமிழகம் வந்துவிடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். அதன் காரணமாக, ஆதாரை மட்டுமே பிரதான ஆவணமாக நாங்கள் ஏற்பதில்லை.
சொந்த மாநிலத்தில் உள்ள பிற ஆவணங்களை கேட்டு வாங்கி, சரிபார்த்த பிறகே பணிக்கு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமல்ல, அனைத்து பனியன் தொழில் பிரிவினரும் கவனமாக இருக்க வேண்டும்.
வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி வந்தவர்களை பணிக்கு வைத்தால், சட்டச்சிக்கல் ஏற்பட்டு, வீண் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.