திருவண்ணாமலை மகாதீபம்; மலையில் மண்ணின் தரம், பாறைகள் நிலைமை பற்றி வல்லுநர் குழு ஆய்வு
திருவண்ணாமலை மகாதீபம்; மலையில் மண்ணின் தரம், பாறைகள் நிலைமை பற்றி வல்லுநர் குழு ஆய்வு
ADDED : டிச 08, 2024 09:05 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்த நிலையில், வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. மண் சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகள் புதைந்ததில், ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட, ஏழு பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
இந்த சூழலில், இந்தாண்டு திருவண்ணாமலை மகாதீபத்தின் போது பக்தர்களை மலையேற அனுமதிக்கலாமா? என ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் இன்று திருவண்ணாமலை வந்துள்ளனர். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் இடத்தில், மண்ணின் தரம், பாறைகளின் நிலை குறித்து வல்லுநர் குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் பேட்டி
'திருவண்ணாமலை தீபமலையில் இன்று புவியியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பிறகே, திருக்கார்த்திகை அன்று 2500 பேருக்கு மலையேற அனுமதி அளிக்கப்படுமா என்பது தெரிவிக்கப்படும்' என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.