தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன் த.வா.க., வேல்முருகன் விளக்கம்
தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன் த.வா.க., வேல்முருகன் விளக்கம்
ADDED : ஏப் 19, 2026 06:37 PM

குள்ளஞ்சாவடி: பெரிய கட்சிகளின் பணத்திற்கு விலை போகாதீர்கள் என, த.வா.க., தலைவர் வேல்முருகன், குள்ளஞ்சாவடியில் பேசினார்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் த.வா.க., வேட்பாளர் கண்ணனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், குள்ளஞ்சாவடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை நேருக்கு நேராக கேள்வி கேட்டுள்ளேன். என்.எல்.சி., க்கு நிலம் கொடுத்தோர், சிப்காட் பிரச்னை என, மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். பண்ருட்டி அருகே வேளாண் ஆராய்ச்சி கல்லுாரி கேட்டதற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் கொடுக்கவில்லை.
போதை கலாசாரம் வேண்டாம் என்று கூறினேன். அதிகம் பேசுகிறாய் என்று என்னை முதல்வர் கூறினார். உங்கள் சீட்டும் வேண்டாம் ; நோட்டும் வேண்டாம் என்று கூறி கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன். கலாசாரத்தை சீரழிக்கும் 'பிக்-பாஸ்' நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தினேன்.
வடலுாரில் ஜோதி தரிசனம் காண இடையூறு ஏற்படுத்தும் தி.மு.க., அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஓட்டா அல்லது, உங்களுக்காக பேசும் வேல்முருகனுக்கு ஓட்டா என சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். பெரிய கட்சிகள் கொடுக்கும் பணத்திற்காக விலை போகாமல், உங்களுக்காக பேசும் எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். ஆடம்பரம் இல்லாத கட்சி தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
