பழநி பஞ்சாமிர்தம்; அலறியடித்து ஓடோடி வந்த தமிழக அரசு
பழநி பஞ்சாமிர்தம்; அலறியடித்து ஓடோடி வந்த தமிழக அரசு
ADDED : செப் 20, 2024 05:36 PM

சென்னை: பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவது வதந்தி என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
லட்டு
திருப்பதி லட்டு இன்று திரும்பிய பக்கம் எல்லாம் தேசிய அளவில் பேசப்படும் பிரச்னையாக மாறிவிட்டது. லட்டுவில் கலக்கப்பட்டதாக கூறப்படும் நெய் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு டெய்ரி நிறுவனம் அனுப்பியதும் தெரியவந்தது. ஆந்திர அரசு, மத்திய அரசு விளக்கம், அறிக்கை, விசாரணை என்று செல்லும் இந்த விவகாரம் ஆன்மீகம் மீது அதிக நாட்டம் கொண்டவர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளதாக தெரிகிறது.
பஞ்சாமிர்தம்
இந் நிலையில் திருப்பதி லட்டு பிரச்னைக்கு இணையாக, பழநி பஞ்சாமிர்தம் விவகாரம் எழுந்தது. திருப்பதி லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு கலந்து அனுப்பப்பட்ட நெய்யை அனுப்பிய அதே நிறுவனம்தான், பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யையும் அனுப்புகிறது என்று சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது.
கடும் அதிர்ச்சி
அதாவது பழநி பஞ்சாமிர்தத்திலும் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்ற ரீதியில் செய்திகள் பரவின. இதை அறிந்த ஆன்மீகவாதிகள் கடும் அதிர்ச்சியில் இருக்க, அதுபோன்ற செய்திகளில் உண்மை இல்லை, அனைத்தும் வதந்தி என்று தமிழக அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்கள்
இது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு கலந்து விற்ற AR Foods பழநி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்யப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
ஆவின் நெய்
இது முற்றிலும் தவறான செய்தி. பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என்று அறநிலையத்துறை விளக்கம் அளித்து உள்ளது.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

