தனியார் பஸ்சில் அனுப்பப்பட்ட குரூப் 4 வினாத்தாள்: சர்ச்சைக்கு டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
தனியார் பஸ்சில் அனுப்பப்பட்ட குரூப் 4 வினாத்தாள்: சர்ச்சைக்கு டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
ADDED : ஜூலை 11, 2025 05:01 PM

சென்னை: குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் தனியார் பஸ்சில் அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையான நிலையில், டி.என்.பி.எஸ்.சி., விளக்கம் அளித்துள்ளது.
நாளை (ஜூலை 12) தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. வழக்கமாக வினாத்தாள்கள் கண்டெய்னர் லாரிகளில், பாதுகாப்பாக சீலிடப்பட்டு கொண்டு செல்லப்படும்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள் தனியார் பஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த பஸ்சின் கதவில் ஒரு பெரிய வெள்ளைத்தாள் (A4 Sheet) மூலம் சீல் வைத்து அனுப்பப்பட்டது.
டி.என்.பி.எஸ்.சி.,யின் இந்த நடவடிக்கை தற்போது பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. அரசுப் பணிக்காக லட்சக்கணக்கானோர் காத்திருந்து அதற்கு தயாராகி வரும் சூழலில் பாதுகாப்பற்ற முறையில் தனியார் பஸ்சில் கேள்வித்தாள்களை அனுப்புவதா என குற்றச்சாட்டுகள் எழுந்தன. வினாத்தாள் கசிந்து விட்டதோ என்ற கேள்விகளும் முன் வைக்கப்பட்டன.
இந் நிலையில், இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் கூறி உள்ளதாவது;
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வினாத்தாள் கசியவில்லை. எனவே தேர்வு எழுதுவோர் அச்சப்படத் தேவையில்லை. தனியார் பஸ்சில் வினாத்தாள் கொண்டு செல்லப்பட்டது குறித்து விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

