சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை; நாளையும் கொட்டும் என எச்சரிக்கை
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை; நாளையும் கொட்டும் என எச்சரிக்கை
UPDATED : அக் 30, 2024 02:24 PM
ADDED : அக் 30, 2024 01:13 PM

சென்னை: தமிழகத்தில் இன்று(அக்.,30) 8 மாவட்டங்களிலும், நாளை (அக்.,31) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே சென்னையில் வெவ்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர பகுதிகளின் மேல், தென்மேற்கு அரபிக் கடலின் மேல் என, இரண்டு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று(அக்.,30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (அக்.,31)
மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் நாளை தீபாவளி நாளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பதிவான மழை (மில்லி மீட்டரில்)
மலர் காலனி 111.6
அண்ணா நகர் 76.8
கொளத்துார் 70.8
தேனாம்பேட்டை 67.5
திரு.வி.க., நகர் 67.2
மணலி 62.1
கோடம்பாக்கம் 53.7
ஆலந்துார் 31.5
அம்பத்துார் 30.2
வானகரம் 21.6
அடையார் 19.8
மாதவரம் 18
வளசரவாக்கம் 13.2
அம்பத்துார், மதுரவாயல், கொளத்துார், கொரட்டூர், பாடி, வளசரவாக்கம், எம்.ஆர்.சி., நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது.இதனால் கடைசி நேர தீபாவளி பொருட்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

