பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி: ஸ்டாலின் வருகை
பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி: ஸ்டாலின் வருகை
ADDED : அக் 30, 2024 04:55 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், இன்று அரசு விழாவாக, 117வது ஜெயந்தி, 62வது குரு பூஜை விழா நடக்கிறது.
மதுரையில் கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின், அதன் பின் காரில் பசும்பொன் வருகிறார். காலை 9:00 மணிக்கு மேல் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்துகிறார்.
அ.தி.மு.க., சார்பில் பொதுச்செயலர் பழனிசாமி, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பா.ஜ., - காங்., - அ.ம.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
10,000 போலீசார் பாதுகாப்பு
தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா கூறுகையில், ''ராமநாதபுரம் மாவட்டம் முழுதும், 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பசும்பொன்னில், கண்காணிப்பு பணியில், ஆளில்லா விமானம், 19 ட்ரோன் கேமராக்கள், 90 இடங்களில் அதிநவீன கேமராக்கள உள்ளன. போலீசாரால் அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும் என்றார்.

