தென் தமிழக மக்களின் ஜீவாதாரமான பெரியாறு அணையின் ஒப்பந்த நாள் இன்று
தென் தமிழக மக்களின் ஜீவாதாரமான பெரியாறு அணையின் ஒப்பந்த நாள் இன்று
ADDED : அக் 29, 2025 03:09 AM

கூடலுார்: தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள 999 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு 130 ஆண்டுகள் ஆனது.
ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமான துறையால் 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 130 ஆண்டுகள் கடந்து விட்டது. அணை கட்டவும் அந்த அணையில் தமிழகத்தின் 999 ஆண்டுகளுக்கான உரிமை குறித்த ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானமும், சென்னை ராஜதானியும் செய்து கொண்ட ஒப்பந்த நாள் (29.10.1886) இன்று.
அணை கட்டி முடிக்கப்பட்டால் தண்ணீர் தேங்கும் நிலப்பரப்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் எல்லைக்குள் வருவதால் திருவிதாங்கூர் மகாராஜாவின் அனுமதி வேண்டினர். பின் 1886 அக்.29ல் 999 ஆண்டுக்கான ஒப்பந்தம் உருவானது.
திருவிதாங்கூர் மகாராஜா சார்பாக திவான் ராம் ஐயங்கார், பிரிட்டிஷ் அரசின் 'செகரட்டரி ஆப் ஸ்டேட் பார் இந்தியன் கவுன்சில்' உறுப்பினர் ஹாமில்டனும் கையெழுத்திட்டனர். அணை கட்டினால் தண்ணீர் தேங்கும் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்திற்கும் தனியே 100 ஏக்கர் நிலத்திற்கு குத்தகைத் தொகையாக ஏக்கருக்கு ரூ.5 தருவதாக சென்னை ராஜதானி ஒப்புக்கொண்டது. இதைத் தொடர்ந்து 1887ல் செப்டம்பர் மாதம் பெரியாறு அணை கட்டும் வேலைக்கான முதல் கல்லை பென்னிகுவிக் நட்டார். பின் 1895 அணை கட்டி முடிக்கப் பட்டது.
அன்றைய கணக்கின்படி கட்டுமான பணிக்கான மொத்த செலவு ரூ.81.30 லட்சம் ஆகும். மதராஸ் கவர்னர் பிரபு தலைமையில் 1895 அக்.10ல் அணை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
'மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதம்' என பெரியாறு அணையை சிறப்பித்தார். நீண்ட பல் நோக்கு திட்டத்தின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளதால் அணை நீரானது எல்லா காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அன்றே இரு மாநிலமும் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் பதிவு செய்துள்ளது.
155 அடி உயரம் கொண்ட அணை கட்டுவதற்கு தண்ணீரை ஒரு குகை பாதை வழியாக தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்கும் ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டது. அணையின் மராமத்து பணிகள் செய்வதற்கான பொருட்களை எடுத்துச் செல்ல சென்னை மாகாணத்திற்கு முழுமையான உரிமை வழங்குவதுடன் அணையில் அடங்கும் மரம் மற்றும் மரக்கட்டைகளை அணையின் நலன் கருதி செயல்படுத்தும் திட்டங்களுக்கு சென்னை மாகாண அரசு எவ்வித கட்டணங்களும் கட்ட வேண்டியது இல்லை என்றும், போக்குவரத்தில் முழு உரிமையையும் அணையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உரிமை அதிகாரம் சுதந்திரம் சென்னை மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் தற்போது அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடந்து வந்தாலும், அணை கடைசிவரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே போல் இன்னும் பல ஆண்டுகள் கம்பீரமாக காணப்படும் என்பதை மறுக்கவே முடியாது.

