UPDATED : பிப் 12, 2024 05:33 PM
ADDED : பிப் 12, 2024 12:09 PM

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது. தேசிய கீதத்தை புறக்கணித்ததாக தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் கவர்னர் முடித்து கொண்டார். இது குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு:
தமிழக அரசை கண்டிக்கிறேன்
இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: மீண்டும் மீண்டும் தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். சட்டசபையின் முதல் நாள் கூட்டம் தேசிய கீதத்துடன் துவங்க வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். கவர்னரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்ற தமிழக அரசின் ஆணவப்போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.
இது தான் ஜனநாயகமா?
தராசு முள் போல் இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்பது போல் கேட்கிறார். இது தான் ஜனநாயகமா?. இப்படி தான் மக்கள் போற்றும் சட்டசபையை நடத்த வேண்டுமா?. தேசிய கீதத்தை புறக்கணித்து, கவர்னரை அவமதித்து, சட்டத்தை அவமரியாதை செய்வது தான் போலி திராவிட மாடல் ஆட்சியா?. இவ்வாறு எல். முருகன் கூறினார்.
உப்பு சலப்பில்லாத உரை
அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கவர்னர் உரை அரசின் கொள்கையை விளக்கும் உரையாக இல்லை. கவர்னர் உரை உப்பு சப்பில்லாத உரை. ஊசிப்போன உணவுப்பண்டம். கடந்தாண்டு போலவே இந்தாண்டும் கவர்னர் உரையில் ஒன்றும் இல்லை. அதிமுக அரசின் திட்டங்களை ரிப்பன் வெட்டி திமுக அரசு திறந்து வைக்கிறது. புதிய திட்டங்கள் ஒன்றும் இல்லை. அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளில் 15 ஆயிரம் பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டன.
கவர்னருக்கு அரசுக்கும் பிரச்னை
கவர்னர் உரையை படிக்க மறுத்தது கவர்னருக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்னை. கவர்னர், சபாநாயகர் பல விவகாரங்களில் மரபை கடைபிடிக்கவில்லை. சபாநாயகர் அப்பாவு நேர்மையாக செயல்பட வேண்டும். கவர்னர் உரையை வாசிக்காதது குறித்து தமிழக அரசு, சபாநாயகர் தான் பதில் அளிக்க வேண்டும்.
சட்டசபையில் முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கவர்னரின் கருத்து தொடர்பான கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட கூடாது; நடுநிலையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முதலில் தேசிய கீதம்
இது குறித்து பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கவர்னர் கூறியவாறு சட்டசபையில் முதலில் தேசிய கீதத்தை பாடுவது தவறில்லை. சபாநாயகர் முழு உரையை வாசிக்கும் வரை கவர்னர் அமர்ந்திருந்தார்.
கவர்னரின் செயலில் எந்த தவறும் இல்லை. சபாநாயகர் தேவையற்ற வார்த்தைகளை பேசிய பின்னரே கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். கோட்சே, சாவர்க்கர் ஆகியோரை ஒப்பிட்டு மரபை மீறி சபாநாயகர் பேசியது தவறு தான். இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னரின் பொறுப்புக்கு மரியாதை
இது குறித்து அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி கொண்டிருக்கிறார் கவர்னர். முதலில் தமிழ்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதத்தையும் பாடுவதும் மரபு. பொய்யான கருத்துக்களை கூறி கவர்னர் உரையை படிக்காமல் புறக்கணித்துள்ளார். தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிப்பது கவர்னரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கருத்து வேறுபாடு இருந்தாலும் ஜனநாயக முறைப்படி கவர்னரின் பொறுப்புக்கு முதல்வர் மரியாதை அளிக்கிறார்.
கவர்னரின் செயல்பாடு
கவர்னர் ரவி அவரது மரியாதையை அவரே கெடுத்துக் கொள்கிறார். முறைப்படி தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் மரியாதை கொடுத்த பின்னர் கவர்னர் வெளியேறியிருக்க வேண்டும். பா.ஜ., ஆளாத மாநிலங்களில் உள்ள கவர்னரின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். கவர்னர்களை வைத்து மாநில அரசுகளை அவமதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்; அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

