'இன்றைய ஒழுக்க நடைமுறை வித்தியாசமானது'; காதலித்து ஏமாற்றிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
'இன்றைய ஒழுக்க நடைமுறை வித்தியாசமானது'; காதலித்து ஏமாற்றிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
ADDED : ஏப் 03, 2025 05:40 AM

புதுடில்லி: காதலித்த பெண் தொடர்ந்த பலாத்கார வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்றைய ஒழுக்க நடைமுறையே வித்தியாசமாகி விட்டதாக கருத்து தெரிவித்தது.
திருமணம் செய்வதாக உறுதி அளித்துவிட்டு, பின் காதலை முறித்துக் கொண்ட ஆண் மீது பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார்.
திருமண உறுதி அளித்ததாலேயே, அவருடன் உறவு கொண்டதாகவும் தற்போது ஏமாற்றியதால் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் தண்டனை அளிக்கும்படியும் மனுவில் கோரி இருந்தார்.
இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தால் அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இன்றைய ஒழுக்க நடைமுறைகளே வித்தியாசமாகி விட்டது. முறிந்து போகும் உறவை அந்தப் பெண் ஏற்றாரா? தோல்வியடையும் காதல் உறவில், இரு தரப்பினருமே பாலியல் உறவை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
மேஜரான ஒரு பெண், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றப்பட்டிருக்கக் கூடாது. ஒழுக்கம், நல்லொழுக்கம் போன்றவை எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு வித்தியாசமாக தெரிகிறது.
நீங்கள் கூறும் கருத்தை ஏற்றால், கல்லூரியில் மாணவர், மாணவி இடையிலான எந்தவொரு உறவும் கூட தண்டனைக்குரியதாகி விடும்.
காதலை முறித்துக் கொள்ள முடியும் எனும் போது உடலுறவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
சில நேரங்களில், பழமைவாத ஒழுக்க அமைப்பின் குறைபாடு காரணமாக, இதுபோன்ற புகார்களில் ஆண் மீது பழி சுமத்தப்படுகிறது. எந்தவொரு தோல்வியுறும் காதலும் இந்த அளவுக்கு தண்டிக்கப்பட முடியுமா?
இவ்வாறு தெரிவித்தனர்.
இதையடுத்து, பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாதவி திவான், ''இது ஒரு காதல் உறவு அல்ல என்பதால்தான் முறிந்து விட்டது. இது ஏற்பாடு செய்யப்பட்ட உறவு. இந்த விஷயத்தில் பெண்ணின் சம்மதத்தை, சுதந்திரமான சம்மதம் என கூற முடியாது.
''சம்மதிக்காவிட்டால், திருமணம் செய்ய மாட்டார் என நம்பினாள். ஆணுக்கு சாதாரண உடலுறவாக இருக்கலாம். பெண்ணுக்கு அப்படி இல்லை,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதி சுந்தரேஷ், “இந்த சூழ்நிலையை பாலின தொடர்பின்றி, இரு தரப்பு கண்ணோட்டத்தில் ஆராய வேண்டும். என் மகள் இந்த நிலையில் இருந்தாலும் கூட, நான் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.
''இந்த விஷயத்தில், இவ்வளவு பலவீனமான விஷயங்களைக் கொண்டு பாலியல் வன்கொடுமைக்கான தண்டனையை அளிக்க முடியுமா?” என்றார்.
மேலும், ''இறுதியாக, அந்தப் பெண் தான் பாதிக்கப்பட்டவள்,'' எனக் கூறிய நீதிபதிகள், குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கக் கோரிய ஆணின் மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

