இன்று தக்காளி வாங்கினால் கிலோவுக்கு ரூ.50 மிச்சம்! 'டக்'கென்று மாறியது விலை
இன்று தக்காளி வாங்கினால் கிலோவுக்கு ரூ.50 மிச்சம்! 'டக்'கென்று மாறியது விலை
ADDED : அக் 16, 2024 11:37 AM

சென்னை: சென்னையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.50 வரை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெருமழை பெய்ததால் மக்களின் அன்றாட தேவைக்கான உணவு பொருட்கள் விலை நினைத்து பார்க்கமுடியாத விலையில் விற்கப்படும். கடந்த 2 நாட்களாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதீத கனமழை கொட்டியது. மழை அறிவிப்பு வெளியான தருணத்தில் முன் எச்சரிக்கையாக பெரும்பாலான மக்கள் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர்.
மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரவேண்டிய காய்கறிகள் வரத்து குறைந்து விலையும் அதிகரித்தது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது. திடீரென ஏற்பட்ட இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிட்டத்தட்ட கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை மொத்தம் மற்றும் சில்லரை விலையில் உயர்வு காணப்பட்டது. மழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரவேண்டிய 1,300 டன் தக்காளிக்கு பதிலாக வெறும் 800 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதுவே விலையேற்றத்துக்கு காரணம் என்று வியாபாரிகள் கூறி இருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று பெருமழை பெய்யாததால் தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் வரத்து அதிகரித்தது. குறிப்பாக, கோயம்பேடு சந்தைக்கு போதிய அளவு தக்காளி இன்று வந்து சேர்ந்தது.
இதையடுத்து, ஒரு கிலோ தக்காளி சந்தையில் ரூ.70க்கும், சில்லரை விற்பனையில் ரூ.85 வரையும் விற்கப்படுகிறது. ஒரே நாளில் உச்சத்துக்கு போன தக்காளி விலை, தற்போது கிலோவுக்கு 50 ரூபாய் வரை குறைந்துள்ளது, வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் விவசாயிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.